தமிழகத்தின் புதிய டிஜிபியைத் தேர்வு செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தமிழக அரசிடமிருந்து வரவில்லை என்ற மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தகவல் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. அரசியல் தலையீடுகள் அதிகரித்திருப்பதே புதிய டிஜிபி நியமனத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு முக்கிய காரணம் என்ற புகார் எழுந்துள்ளது.
தமிழகக் காவல்துறையின் தலைமை இயக்குனராக இருக்கும் சங்கர்ஜிவால் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. பதவி நிறைவு பெறும் சங்கர்ஜிவாலுக்குப் பதவி நீட்டிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகிய நிலையில், தன் நட்பில் இருக்கும் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உட்பட அனைவரையும் அழைத்து விருந்து வைத்து பணி நிறைவு பெற இருப்பதாகத் தெரிவித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதற்கிடையில் தமிழகத்தின் புதிய காவல் தலைமை இயக்குனர் பதவிக்கு தகுதிவாய்ந்த உயரதிகாரியைத் தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், புதிய டிஜிபி தொடர்பாகத் தமிழக அரசிடமிருந்து எந்தவொரு முன்மொழிவும் தற்போதுவரை வரவில்லை என மத்திய பணியாளர்த் தேர்வாணையம் தெரிவித்திருக்கும் தகவல் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. தற்போதைய டிஜிபியின் பதவிக்காலம் நிறைவடைய ஒருவாரக் காலம் கூட இல்லாத நிலையில், புதிய டிஜிபியைத் தேர்வு செய்வதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
காவல்துறையின் தலைமை இயக்குனர்ப் பதவிக்கு டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை மூன்று மாதங்களுக்கு முன்பே மாநில அரசின் மூலம் மத்திய பணியாளர்த் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், யுபிஎஸ்சி விதிமுறைகளின் அடிப்படையிலும் டிஜிபியாக நியமிக்கப்படும் அதிகாரி குறைந்தது 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருக்க வேண்டும், அவர்ப் பதவி ஓய்வுபெற குறைந்தபட்சம் 6 மாதங்களாவது இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
விதிமுறைகளின் படி மாநில அரசு முன்மொழியும் தகுதிப்பட்டியலை வைத்து யுபிஎஸ்சி தேர்வுக் குழு நடத்தும் பரிசீலனைக் கூட்டத்தில் யுபிஎஸ்சி தலைவர், மாநிலத்தின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், தற்போதய டிஜிபி ஆகியோர் பங்கேற்று தகுதி வாய்ந்த மூவரைத் தேர்ந்தெடுப்பதும், அதில் ஒருவரை டிஜிபியாகத் தமிழக அரசு அறிவிக்கும் என்பது தான் நடைமுறையாக உள்ளது.
வரும் 31 ஆம் தேதியுடன் சங்கர்ஜிவாலின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில், இதுவநாள் வரைப் புதிய டிஜிபி நியமனத்திற்கான எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை எனவும், அது தொடர்பான எந்த ஆவணங்களும் தங்களிடம் இல்லை எனவும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டிஜிபி அந்தஸ்தில் சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார்ச் சிங், வன்னியப் பெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் தேவ் வான்கடே மற்றும் சஞ்சய் மாத்தூர் ஆகிய ஒன்பது பேர் உள்ளனர். இந்த ஒன்பது பேரில் ஒருவர்த் தான் புதிய டிஜிபியாகத் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
புதிய டிஜிபியைத் தேர்வுசெய்வதில் பல்வேறு அரசியல் தலையீடுகள் இருப்பதாக விமர்சனம் எழத் தொடங்கியுள்ளது. முதலமைச்சரின் தேர்வு ஒருவராக இருந்தால் உதயநிதி ஸ்டாலினின் தேர்வு ஒருவராக இருப்பதாகவும், முதலமைச்சரின் குடும்பத்தினரின் தேர்வு மற்றொருவராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் பலர் முதலமைச்சர் மற்றும் குடும்பத்தினரின் சிபாரிசுகளை நாடியிருப்பதால் புதிய டிஜிபியைத் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனக்குச் சாதகமான காவல் அதிகாரியை டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்பதில் திமுகத் தலைமை திட்டவட்டமாக உள்ளது. அதுவே புதிய டிஜிபியைத் தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு முக்கிய காரணமாகவும் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் புதிய டிஜிபியைத் தேர்வு செய்யும் நடவடிக்கை மேலும் சில வாரங்கள் தள்ளிப் போகலாம் எனவும், அதுவரைத் தமிழகத்திற்கு பொறுப்பு டிஜிபி நியமிக்கப்படலாம் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.