இஸ்ரோவால் செலுத்தப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், இஸ்ரோவால் செலுத்தப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சிறப்பாக செயல்பட்டு, ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பை உறுதி செய்ததாக கூறினார்.
நாட்டின் பாதுகாப்பிற்கு செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 2035ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கு சொந்தமாக விண்வெளி நிலையம் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர்,2040ஆம் ஆண்டுக்குள் சந்திரனில் இந்தியர், கால் பதிப்பார் என்றும் உறுதியளித்தார்.
ககன்யான் திட்டம் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் செயல்படுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம் தெரிவித்தார்.