ஒய்.எஸ்.ஆர்க் காங்கிரஸ் கட்சியினர் டன் கணக்கில் பணம் வைத்துள்ளதால், அவர்களால் யாரையும் எளிதாக விலைக் கொடுத்து வாங்க முடியும் எனத் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்க் குழு தலைவர்ப் பி.ஆர் நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பதி மலை அடிவாரத்தில் தேவஸ்தானத்திற்குச் சொந்தமாக உள்ள 30 ஏக்கர் நிலம் கடந்த ஒய்.எஸ்.ஆர்க் காங்கிரஸ் ஆட்சியில், நட்சத்திர விடுதி கட்ட ஓபராய் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் அந்நிறுவனம் அங்கு நட்சத்திர விடுதி கட்டாமல் அந்த இடத்தை மற்றொரு நிறுவனத்திற்கு வழங்கியது. இந்த விவகாரம் சர்ச்சையானதால் ஓபராய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இடம் தேவஸ்தான நிர்வாகத்தால் திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில், அந்த இடத்திற்கு எதிர்புறம் உள்ள இடம் மீண்டும் ஓபராய் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் தேவஸ்தான நிர்வாகம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், தேவஸ்தான அறங்காவலர்க் குழு தலைவர்ப் பி.ஆர் நாயுடு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், திரும்ப பெறப்பட்ட நிலத்திற்குப் பதிலாக ஓபராய் நிறுவனத்திற்கு நிலம் வழங்க மாநில அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில் புதிய நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, நில குத்தகைதாரரின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து, அந்த நிலத்தைத் திரும்பப்பெற்று ஓபராய் நிறுவத்திற்கு வழங்கியதாக அவர்க் குற்றம் சாட்டினார்.