அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மிரட்டலுக்குப் பணியப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை விரிவுபடுத்துவதில் பின்வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
சீனாவின் கெடுபிடி காரணமாக, ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனம் மூலம் இந்தியாவில் ஐ-போன் உற்பத்தியை மேற்கொண்டு வந்தது ஆப்பிள் நிறுவனம்.
அண்மையில், இந்தியா மீதான வரி விதிப்பைத் தொடர்ந்து, இந்தியாவில் ஐ-போன் தயாரிப்பைக் கைவிடுமாறு ஆப்பிள் நிறுவனத்தை மிரட்டி வந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தினார். இதற்குப் பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்த ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், இந்தியாவில் தங்களது தற்போதைய திட்டங்கள் அனைத்தும் தொடரும் என்று கூறியிருக்கிறார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆப்பிள் சாதன உற்பத்தி ஆலையில், கடந்த ஆண்டு மட்டும் 2 கோடி ஐ-போன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில் ஐ-போன் 15 மற்றும் ஐ-போன் 16 ஆகியவை அடங்கும்.
தற்போது ஆண்டுதோறும் ஐ-போன் உற்பத்தியை 6 கோடி யூனிட்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், இதற்காக 250 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாகப் பெங்களூரு, புனேவில் புதிய ஷோரூம்களைத் திறக்கும் ஆப்பிள் நிறுவனம், தொடர்ச்சியாக மும்பை, நொய்டாவிலுரும் புதிய ஸ்டோர்களைத் திறக்க முடிவு செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஐ-போன் 17-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் முதலீடுகளைத் தாமதப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று ஆப்பிள் நிறுவனம் கூறியது.
அதை உறுதிபடுத்தும் வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி தொடரும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் கத்தாரில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் ஐ-போன் உற்பத்தி கட்டமைப்புகளை அமைப்பதில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.
ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் ஐபோன்களை அசெம்பிள் செய்யத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். கடந்த காலாண்டில் அமெரிக்காவில் விற்கப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்றும், ஒரு காலத்தில் ஐபோன் உற்பத்தியில் ஆதிக்க மையமாக இருந்த சீனா, தற்போது பெரும்பாலும் அமெரிக்கா அல்லாத பிற நாடுகளின் சந்தைகளுக்குச் சேவை அளிப்பதாகவும் ஆப்பிள் நிறுவனம் எதிர்வினையாற்றியுள்ளது.
வலுவான சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில் இருந்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பிலான ஐ-போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதோடு, உள்நாட்டு விற்பனையும் இரட்டை இலக்கை அடைந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனச் சிஇஓ குக் கூறியுள்ளார்.
இதன் மூலம் டிரம்பின் மிரட்டலுக்கு ஆப்பிள் நிறுவனம் சரியான பதிலடி கொடுத்திருக்கிறது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.