இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. இதனால், எந்தெந்த துறைகள் அதிகப் பாதிப்பையும், எந்தெந்த துறைகள் குறைந்த பாதிப்பையும் சந்திக்கும் என்பது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் வர்த்தகக் கூட்டாளியாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பெரும்பாலானவை அமெரிக்காவுக்குதான் செல்கின்றன. இந்நிலையில், 50 சதவீத வரிவிதிப்பு இந்தியாவைச் சேர்ந்த சில துறைகளை அதிகம் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
ரத்தினங்கள், நகைகள் உள்ளிட்டவை இந்தியாவில் இருந்து அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நகைகள் ஏற்றுமதி துறையில் 30 சதவீத ஏற்றுமதி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்தாண்டு மட்டும் 10 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது இந்திய மதிப்பில் 87 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
அதேபோல், கடந்தாண்டு 22 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்குக் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எனவே, இது சார்ந்த துறைகளும் கணிசமான பாதிப்பைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் பட்டியலில் ஜவுளிப்பொருட்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
கடந்தாண்டு 2 பில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதேபோல, கடந்தாண்டு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகியுள்ளன.
இப்படிப் பல தொழில்துறைகள் அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிறுவனங்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்துவித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்தியாவிடம் இருந்து பொருட்களை வாங்கிக்கொள்ளத் தயார் என ரஷ்யாவும் அறிவித்துள்ளது.
இதனிடையே,ஸ்மார்ட்போன், மின்னணு சாதனங்கள், மருந்துப்பொருட்கள் சார்ந்த துறைகள் அமெரிக்காவின் வரிவிதிப்பால் குறைந்த அளவிலான பாதிப்பையே சந்திக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல, சூரிய மின்கலம், காற்றாலைகள் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த நிறுவனங்களுக்கும் அதிகப் பாதிப்பு இருக்காது எனக் கூறப்படுகிறது.