வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீநகர், அனந்தநாக். ராம்பன் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஜம்முவில் 380 மில்லி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளதாகவும் மேலும் 3 நாட்களுக்கு மழைத் தொடரும் எனவும் அம்மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது. 1910ம் ஆண்டுக்குப்பின் ஜம்முவில் 24 மணிநேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும்.
அனந்தநாக் மாவட்டத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தன. வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர்.
இதேபோல் ராம்பன் மாவட்டத்தில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுப் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
முன்னெச்சரிக்கையாகப் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தோடா மாவட்டம் பதேர்வா பகுதியில் கனமழையால் வீடுகள் மற்றும் கோயில்கள் சேதமடைந்தன. அங்கு உள்ள ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் தற்காலிகப் பாலத்தை அமைத்துக் கடந்து சென்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் தாவி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் . பெலிச்சரனா பகுதியில் 35 வீடுகள் மற்றும் 6 கடைகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் தாவி நதியில் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அப்போது, அவ்வழியாக வந்த காரும் நீரில் அடித்து செல்லப்பட்டது.