வாங்கும் சக்தி சமநிலை அடிப்படையில், 2038ம் ஆண்டுக்குள் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று Economy Watch அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் ஐந்து பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா வளர்ந்து வருகிறது. தற்போது நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறியுள்ளது. 2028ம் ஆண்டுக்குள் சந்தை மாற்று விகித அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறப்படுகிறது.
அதிகச் சேமிப்பு மற்றும் முதலீட்டு விகிதங்கள், சாதகமான மக்கள்தொகை மற்றும் நிலையான நிதி நிலை உள்ளிட்ட வலுவான பொருளாதார அடிப்படைகளுடன் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறி வருகிறது.
இந்த விதிமுறைக்கு ஏற்ப, இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் 20.7 டிரில்லியன் டாலராகும் என்று IMF கூறியுள்ளது. இதன் அடிப்படையில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் ஜப்பானை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவின் சராசரி வயது 28.8 ஆகவும், இரண்டாவது மிக உயர்ந்த சேமிப்பு விகிதத்துடனும் தனித்து நிற்கிறது.
கடந்த ஆண்டில், அரசின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 81.3 சதவீதமாக இருந்தது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75.8 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2030ம் ஆண்டில் 42.2 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் சர்வதேச அளவில் சீனப் பொருளாதாரம் முன்னணியில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆனாலும், வயதான மக்கள்தொகை மற்றும் அதிகரித்து வரும் கடன் ஆகியவைச் சீனாவுக்குப் பெரும் சவால்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120 சதவீதத்துக்கும் அதிகமாக கடன் உள்ள அமெரிக்காவில் மெதுவான வளர்ச்சி விகிதங்களே உள்ளன.
ஜெர்மனியிலும், ஜப்பானிலும் அதிகச் சராசரி வயது சவாலாக முன்னிருக்கிறது என்றும், அந்நாடுகள் பெரும்பாலும் உலகளாவிய வர்த்தகத்தை அதிகமாக நம்பியிருப்பதால் பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது.
இந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சந்தை மாற்று விகித அடிப்படையில் 14.2 டிரில்லியன் டாலராகும் என்று IMF கணித்துள்ளது.
2030ம் ஆண்டுக்குள் 20.7 டிரில்லியன் டாலர்களை எட்டும் இந்தியாவின் சராசரி வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா 2.1 சதவீதச் சராசரி வளர்ச்சி விகிதங்களை எட்டும் நிலையில், 2038 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா முன்னேறும் என்றும் IMF அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணிப்பின் படி 2038ம் ஆண்டுக்குள், வாங்கும் சக்தி சமநிலை அடிப்படையில் 34.2 டிரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறுகிறது.
மேலும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதை, உற்பத்தியை அதிகரிக்கப் பொருட்கள் மற்றும் சேவை வரி (GST), திவால்நிலை மற்றும் திவால்நிலைக் குறியீடு, UPI மூலம் நிதி சேர்க்கை மற்றும் உற்பத்தியுடன் இணைக்கப் பட்ட ஊக்கத்தொகைப் போன்ற புதிய திட்டங்களால், இந்தியாவின் பொருளாதாரம் வலிமையுடன் வளர்கிறது என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் 2047ஆம் ஆண்டுக்குள் அகண்ட பாரதம் என்ற இலக்கைத் இந்தியா தொடும் என்பதையே IMF மற்றும் ECONOMIC WATCH அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.