மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், ஆளுநருக்கு ஒருபோதும் ஆணை பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ததற்கு எதிராக குடியரசு தலைவர் கேள்வி எழுப்பிய வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உட்பட 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை என்றால், காரணத்தை கூற வேண்டும் என குடியரசு தலைவருக்கு நீதிமன்றம் எப்படி கூற முடியும்? என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
குடியரசு தலைவர் முடிவெடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடலாம் என்று எப்படி ஆணையிட முடியும்? என்று கேள்வி எழுப்பிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,ஆளுநருக்கு ஒருபோதும் ஆணை பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆளுநர்கள் 6 மாதம், ஒரு வருடம் என்று மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது என தெரிவித்தனர்.
பின்னர், மசோதாக்கள் மீது முடிவெடுக்கும்போது ஆளுநர் பல விஷயங்கள் குறித்து பரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.