பல்வேறு தொழில்களை செய்து பணக்காரர்களாகிய பலரை நமக்குத் தெரியும். ஆனால், மும்பைச் சேர்ந்த ஒருவர், வித்தியாசமான தொழில் செய்து கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். யார் அவர்? அப்படி என்ன தொழில் செய்தார்? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பிச்சைக்காரன் திரைப்படத்தில் வரும் காட்சி இது. விஜய் ஆண்டனி பிசைக்காரனாக இருந்து அனைவரிடமும் கெஞ்சிக்கொண்டிருப்பார். அடுத்த நொடி பார்த்தால், டிப்டாப்பாக உடையணிந்து மாஸாக என்ட்ரி கொடுத்து அனைவருக்கும் ஷாக் கொடுப்பார்.
இதேபோன்ற வாழ்க்கையை உண்மையிலேயே ஒரு பிச்சைக்காரர் வாழ்ந்து வருகிறார். அதுவும் இந்தியாவில். உலகின் மிகப் பெரிய பணக்காரப் பிச்சைக்காரர் என அழைக்கப்படும் அவரது பெயர், பாரத் ஜெயின்.
மும்பையில் மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதில் இருந்தே பல கஷ்டங்களைச் சந்தித்தார். ஒரு கட்டத்தில் இனி அவர்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
எனவே, அவர் பிச்சை எடுக்கத் தொடங்கினார். “அப்ப பாக்கணுமே இந்தக் காந்தி பாபுவ..” என்பது போல, ஒரு நாளைக்கு 10 மணி நேரம், 12 மணிநேரம் வரை உழைக்கத் தொடங்கினார். ஞாயிற்றுக்கிழமையாவது ஓய்வெடுப்பாரா என்றால், அதுவும் இல்லை. அன்றுதான் அவருக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். எனவே, அன்றைய தினம் அவர் டபுள் ட்யூட்டி பார்ப்பார்.
இப்படி, வாரத்தின் 7 நாட்களும், வருடத்தின் 365 நாட்களும் ஓய்வின்றிப் பிச்சை எடுத்தார்ப் பாரத் ஜெயின். ஒரு நாளைக்கு அவர் 2 ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது. அப்படியென்றால் மாத்திற்குச் சுமார் 75 ஆயிரம் ரூபாய். இந்தத் தொகை ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் தொடக்கநிலை ஊழியர்களின் சம்பளத்தைக் காட்டிலும் அதிகம்.
அண்மையில் 3BHK என்று ஒரு படம் வெளியானது. ஒற்றை வீட்டைக் கட்ட அந்த மொத்த குடும்பமே படாதபாடு படும். ஆனால், நமது பாரத் ஜெயின் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி வீட்டைக் கட்டி வைத்துள்ளார். அதுவும் 2 வீடு.
அவரது மனைவி, இரண்டு மகன்கள், தந்தை, சகோதரர் உள்ளிட்ட அனைவரும் அந்த வீடுகளில்தான் வசித்து வருகின்றனர். இதுபோதாதென்று, தானே பகுதியில் அவர் 2 கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாகவும், அதன் மூலம் மாதத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் வருவாய் வருவதாகவும் கூறப்படுகிறது.
பாரத் ஜெயின் குறித்த இத்தகைய தகவல்கள், பலருக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தியுள்ளது. பணத்தைச் சேமித்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால், கடைசியில் பிச்சைதான் எடுக்க வேண்டி வரும் எனப் பலர் அறிவுரைக் கூறுவார்கள். பாரத் ஜெயின் இந்த அறிவுரையை அப்படியே தலைகீழாகக் கடைபிடித்து சாதித்துள்ளார். முதலில் அவர் பிச்சை எடுத்துள்ளார். பின்னர் அதனைச் சேமித்து வைத்து பணக்காரராகியுள்ளார்.
இத்தனைப் பணம் சேர்த்த பின்னும் பாரத் ஜெயின் இன்றும் பிச்சை எடுத்துகொண்டுதான் இருக்கிறார். இந்த உழைப்புதான் அவரைத் தற்போது, உலகின் பணக்காரப் பிச்சைக்காரர் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரராக்கியுள்ளது.