இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி விதிப்பு சட்டவிரோமானது என அமெரிக்க நீதிமன்றம் கண்டித்துள்ளது. டிரம்பின் வரி வதிப்பு அதிகார மீறல் எனச் சம்மட்டி அடி கொடுத்துள்ள நீதிமன்றம், அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்துள்ளது.
சர்ச்சைகளுக்குப் பெயர் போன அமெரிக்க அதிபர் டொனால்ட் அண்மையில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்திய பொருட்களுக்கு ஏற்கனவே 25 சதவிகித வரி விதிக்கப்பட்ட நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவிகித வரி விதிப்பையும் அண்மையில் அமல்படுத்தினார். டிரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகளால் அமெரிக்காவுக்கான இறக்குமதி பாதிக்கப்படுவதோடு, உள்நாட்டில் பொருட்களின் விலை உயரும் என்று அமெரிக்க மக்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத டிரம்ப் உலக நாடுகளுக்கு எவ்வளவு வரி விதிக்கலாம் என்ற சிந்தனையிலேயே மூழ்கியிருந்தார். டிரம்பின் வரி விதிப்பு முடிவுக்கு எதிராகக் கடந்த மே மாதம் நியூயார்க் வர்த்தக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
டிரம்பின் பெரும்பாலான வரி விதிப்புகள் சட்டவிரோதமானது என்று கண்டித்திருக்கும் நீதிமன்றம், கூடுதல் வரி விதிப்பை நீக்குமாறு உத்தரவிட்டது. அதிக வரி விதிப்பை நியாயப்படுத்தவே தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும், வரி விதிப்பு நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், வரி விதிப்பில் அமெரிக்க அதிபருக்குச் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றும் கூறியது. அதேநேரத்தில், மேல்முறையீட்டுக்கு அக்டோபர் 14 வரைக் கால அவகாசமும் அளித்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள டிரம்ப், அனைத்து வரி விதிப்புகளும் நடைமுறையில் உள்ளதாகக் கூறியிருக்கிறார்.. இந்தத் தீர்ப்பு உறுதிபடுத்தப்பட்டால், அது அமெரிக்காவை அழித்துவிடும் என்றும் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பு டிரம்புக்குப் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், இந்தத் தீர்ப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதிபடுத்துமானால், பிற நாடுகளுக்குக் கூடுதலாக விதிக்கப்பட்ட வரியைத் திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
தற்போது சூழலில் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மேல்முறையீட்டுக்குச் செல்லும் நிலையில், அக்டோபர் 14ம் தேதிக்குப் பிறகே வரி விதிப்பு ரத்தாகுமா அல்லது தொடருமா என்பது தெரியவரும்.