சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலான பயங்கரவாதத்தை வேரறுக்க, இந்தியாவும் – சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார். இரு தரப்பு உறவுகளை மேம்படுதத இந்தியா – சீனாவும் உறுதிபூண்டிருப்பது, அமெரிக்காவைக் கலக்கமடைய செய்திருக்கிறது..
7 ஆண்டுகளுக்குப் பின் சீனா சென்ற பிரதமர் மோடியால், இந்தியா- சீனா இடையேயான நல்லுறவு மீண்டும் துளிர்த்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தியான்ஜின் நகரத்தில் சந்தித்துப் பேசினர்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னை, பாதுகாப்பு ஒத்துழைப்பு, அமெரிக்க வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
அப்போது பேசிய பிரதமர் மோடி, சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவும், சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எல்லையில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக் கொண்ட சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா – சீனா எல்லை மேலாண்மைத் தொடர்பாக சிறப்பு பிரதிநிதிகளுக்கு இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டிருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, கைலாஷ் மானசரோவர் யாத்திரைத் தொடக்கம், இந்தியா – சீனா இடையே மீண்டும நேரடி விமான சேவை உள்ளிட்டவைக் குறித்தும் பேசினார்.
இரு நாடுகளையும் சேர்ந்த 280 கோடி மக்களின் நலன்கள் நமது ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா சீனா ஒத்துழைப்பு மனிதக் குலத்தின் நலனுக்கு வழிவகுக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மூலம் இருதரப்பு உறவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெற்றிகரமான தலைவராகச் சீனா பொறுப்பேற்றதற்காகத் தங்களை வாழ்த்துவதாகக் கூறிய பிரதமர் மோடி, சீனாவுக்கு வருகைத் தர அழைப்பு விடுத்ததற்கும், இரு தரப்பு சந்திப்புக்கும் நன்றித் தெரிவித்தார்.
2026ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டிற்கு வருமாறும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்தார்.
முன்னதாகப் பேசிய சீனா அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவும், சீனாவும் பழம்பெரும் நாகரிகங்களைக் கொண்ட கிழக்கத்திய நாடுகள் என்று தெரிவித்தார். அண்டை நாட்டு நட்புறவுகளைக் கொண்ட சிறந்த நண்பர்களாகவும், ஒருவருக்கொருவர் வெற்றியைப் பெற வைக்கும் கூட்டாளிகளாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும என்றும் வலியுறுத்தினார்.
மேலும் மூன்றாம் தரப்பு ஆதிக்கத்தைத் தவிர்த்து, சுயாட்சி, வர்த்தகத்தை மேம்படுத்த இரு தலைவர்களும் வலியுறுத்தினர். அண்மையில் இந்தியா – சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், பிரதமர் மோடியுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் இவ்வாறு பேசியிருப்பது அமெரிக்காவுக்கு விடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.