இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்திருக்கும் நிலையில் இந்தப் பிரச்னையை மேற்கத்திய ஊடகங்கள் எப்படி அணுகுகின்றன என்பதைப் பார்க்கலாம்.
“அமெரிக்காவின் ஏற்றுமதிக்கு அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா” இரண்டாவது முறை அதிபராகப் பதவியேற்றதில் இருந்து ட்ரம்ப் அடிக்கடிச் சொல்லும் புகார்களில் இதுவும் ஒன்று.
இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அரசு மறுத்துவிட்டது. அதனால் கோபமடைந்த ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதித்துள்ளார்.
அவரது நடவடிக்கையை விமர்சிக்கும் வகையில் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் கூடுதல் வரி மூலம் அமெரிக்கா சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக்கொண்டதாகக் கூறுகின்றன மேற்கத்திய ஊடகங்கள்.
குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த செய்தி நிறுவனங்கள் ட்ரம்ப்பின் முடிவைக் கடுமையாக விமர்சிக்கின்றன. கூடுதல் வரிவிதிப்பால் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக விலைக் கொடுக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க மக்கள் ஆளாகியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் சொல்கின்றன.
ராஜாங்க உறவுகளுக்கு மாற்றாக வணிக வற்புறுத்தல்களை முன்னிறுத்தினால் ஆசிய கண்டத்தின் முக்கியப் பங்காளியான இந்தியாவோடு இருக்கும் உறவு பாதிக்கப்படும் என அமெரிக்க MEDIA-க்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
48 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாக BLOOMBERG தெரிவித்துள்ளது. இந்தியப் பொருட்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கத் தொழில்துறையில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாக WALL STREET JOURNAL கூறியுள்ளது.
அதிக வரி மூலம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுப்பது நல்லதல்ல என ஐரோப்பிய ஊடகமான THE GUARDIAN செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகைய செயல்களால் ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியாவுக்கு இருக்கும் உறவு மேலும் வலுப்படும் என்றும் THE GUARDIAN எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கைகளால் இந்தியா அழுத்தத்தை எதிர்கொண்டிருப்பது உண்மை என்றாலும் அந்த நாடு தனிமைப்படுத்தப்படவில்லை என THE GUARDIAN கூறியுள்ளது. கூடுதல் வரி என்ற சூதாட்டம் மூலம் ராஜாங்க ரீதியிலான லாபத்தை அடைய அமெரிக்கா முயல்வதாக லண்டனைச் சேர்ந்த FINANCIAL TIMES தெரிவித்துள்ளது.
இப்படி முன்னணி ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளை விமர்சித்துள்ளபோதும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
பெரியண்ணன் மனப்பான்மையுடன் பிறநாடுகளை அச்சுறுத்துவது அமெரிக்காவுக்குப் புதிதல்ல என்றாலும் ட்ரம்ப்பின் செயல்கள் வரம்புமீறிச் செல்வதாக அமெரிக்க மக்களே குற்றம்சாட்டுகின்றனர்.
ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட தேசங்களுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வருகிறார். உலகின் பெரும் சந்தையாகக் கருதப்படும் இந்தியாவுடன் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும், ஏற்கனவே இருக்கும் உறவை வலுப்படுத்திக் கொள்ளவும் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
என்னதான் வல்லரசு நாடாக இருந்தாலும் ஐபோனில் தொடங்கி முக்கிய மருந்துகள் வரை இந்தியாவை நம்பியிருக்கிறது அமெரிக்கா. இந்த உண்மையை ட்ரம்ப் உணர்ந்துகொண்டால் அனைவருக்கும் நல்லது.