ஆன்லைனில் வேலை வழங்குவதாக கூறி 206 கோடி ரூபாய் மோசடி செய்த 2 பேரை, மும்பை விமான நிலையத்தில் புதுச்சேரி சைபர்க் கிரைம் போலீசார்க் கைது செய்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவருக்குத் தனியார் நிறுவனம் ஒன்று ஆன்லைன் வாயிலாக டைப்பிங் பணி வழங்கியுள்ளது.
11 மாதங்கள் அவர் பணியாற்றிய நிலையில், குறிப்பிட்ட காலத்தில் வேலையைச் செய்து முடிக்கவில்லை எனக்கூறிய அந்நிறுவனம், வழக்கு தொடர்வோம் என மிரட்டி சுமார் நான்ரை லட்சம் ரூபாயைப் பறித்துள்ளது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகேஷ் குமார், சைபர்க் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த சைபர் மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட மேலும் 2 பேர், துபாயில் இருந்து மும்பை வந்தபோது கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நாடு முழுவதும் இந்தக் கும்பல் மீது 2 ஆயிரத்து 168 புகார்கள் உள்ளதும், 206 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்தது. 23 மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த இருவரையும், போலீசார் சிறையில் அடைத்தனர்.