வெளிப்படையாகத் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாட்டை எப்படி ஏற்க முடியும் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், ஷெபாஸ் ஷெரீப் முன்பே பாகிஸ்தானைப் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதேபோல் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், நேபாளப் பிரதமர் கே.பி.ஒலி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, உள்ளிட்ட தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் முன்பே இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டைப் பதிவு செய்தார். கடந்த நான்கு தசாப்தங்களாக இந்தியா பயங்கரவாத பாதிப்பை எதிர்கொள்வதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதல் மூலம் பயங்கரவாதத்தின் கோர முகத்தைக் கண்டதாக தெரிவித்தார். இந்தத் துயர நேரத்தில் இந்தியாவுடன் துணை நின்ற நட்பு நாடுகளுக்கு நன்றித் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்க் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையே அடிப்படை எனத் தெரிவித்தார்.
ஆனால் பயங்கரவாதமும், பிரிவினைவாதமும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் பிரதமர் மோடி வேதனைத் தெரிவித்தார். எனவே உலக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல், மனிதகுலத்திற்கும் எதிரான சவாலாக இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.