25வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா சென்ற பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும், ரஷ்யாவில் தயாரிக்கப் பட்ட Aurus sedan காரில் சேர்ந்து பயணம் செய்தது உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில், பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர்ப் புதினும் ஒருவரை ஒருவர் அரவணைத்து அன்பைப் பரிமாறிக் கொண்டனர் . இது சமூக ஊடகங்களில் வேகமாக வைரலானது. அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடியும், தனது எக்ஸ் பக்கத்தில் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு, அதிபர்ப் புதினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி என்று பதிவிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, காரில் ரஷ்ய அதிபர்ப் புதினுடன் பயணிக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில், வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, இருதரப்பு சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு ஒன்றாகப் பயணித்தோம் என்றும், அதிபர்ப் புதினுடனான உரையாடல்கள் எப்போதும் ஆழமான புரிதலைத் தருபவை என்றும் பதிவிட்டுள்ளார்.
உச்சி மாநாடு நடைபெற்ற இடத்தில் இருந்து, Ritz-Carlton ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்புக்குப் பிரதமர் மோடியுடன் சேர்ந்து பயணிக்க ரஷ்ய அதிபர்ப் புதின் விரும்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காகச் சுமார் பத்து நிமிடங்கள் பிரதமர் மோடி வரும் வரை, காரிலேயே அதிபர்ப் புதின் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
காரில் செல்லும் போதே சுமார் 45 நிமிடங்கள் இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. பிறகு ஹோட்டலில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இரு தலைவர்களும் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, பிரதமர் மோடி,சீன அதிபர் ரஷ்ய அதிபர்ப் புதின் மூவரும் இணைந்திருக்கும் மாநாட்டுப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்தப் புகைப்படங்களைத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி, “தியான்ஜினில் உறவுகள் தொடர்கின்றன என்றும், புதின் மற்றும் அதிபர் ஜியுடன் கண்ணோட்டங்கள் பரிமாறப்பட்டன என்றும் பதிவிட்டிருந்தார்.
உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்பு ஆகிய மூன்று தூண்களைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் அணுகுமுறையைக் கோடிட்டுக் காட்டியிருந்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி,40 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தின் தாக்கத்தைச் இந்தியா சந்தித்துள்ளது என்றும் SCO தலைவர்களுக்கு நினைவுபடுத்தியிருந்தார்.
தெற்காசியாவை மத்திய ஆசியாவுடன் இணைக்கும் சபகர்த் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் போன்ற இந்தியா தலைமையிலான திட்டங்களை எடுத்துக் காட்டிய பிரதமர் மோடி, இறையாண்மையைப் புறக்கணிக்கும் திட்டங்கள் நம்பிக்கையையும் அர்த்தத்தையும் இழக்கின்றன என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்லும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் மோடியின் சீனப் பயணம் அமெரிக்காவைத் திக்குமுக்காட வைத்துள்ளது. இதன் விளைவாக, இந்திய- அமெரிக்க இரு நாடுகளின் மக்களுக்கும் இடையே இருக்கும் நீடித்த நட்புதான், ஒத்துழைப்பின் அடித்தளமாகும். பொருளாதார உறவின் மகத்தான ஆற்றலை உணரும்போது முன்னேறி செல்கிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா – இந்தியா உறவு புதிய உச்சங்களை எட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், புதுமை, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள் வரை இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நீடித்த நட்புதான் பயணத்தைத் தூண்டுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ள அந்தப் பதிவில், #USIndiaFWDforOurPeople எனும் ஹேஷ்டேக்கைப் பின்தொடருங்கள் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் இரண்டு நாள் சீனப் பயணம்,புவிசார் அரசியலில் பெரும் மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்றும், உலக ஒழுங்கைப் பிரதமர் மோடி மாற்றி எழுதுகிறார் என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.