வைகை அணையில் இருந்து 58 கால்வாய்க்குத் தண்ணீர் திறக்கக் கோரி உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள 58 கால்வாய்க்கு நிரந்தரமாக தண்ணீர் திறக்க கோரி ஆண்டுதோறும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், உசிலம்பட்டி முருகன் கோயில் முன்பு சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 58 கால்வாயில் நிரந்தரமாகத் தண்ணீர் திறந்து விடுமாறு முழக்கம் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ அய்யப்பன், மாவட்ட ஆட்சியர்கள் முதல் நீர்வளத்துறை அமைச்சர் வரை முறையாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுத்து தண்ணீர் திறக்கவில்லை எனில் உசிலம்பட்டி மக்களைத் திரட்டி வைகை அணையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.