சென்னை ஒட்டியம்பாக்கத்தில் தனியார் பட்டா இடத்தில் பள்ளம் தோண்டி மண் திருட்டில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன், கடந்த 2014-ல் ஒட்டியம்பாக்கம் பகுதியில் 16 சென்ட் இடம் வாங்கியுள்ளார்.
இதையடுத்துக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நிலத்தைச் சென்று பார்த்தபோது, அங்கு 60 அடி ஆழத்தில் கிணறும், 20 அடி ஆழத்தில் பள்ளமும் தோண்டப்பட்டிருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், நிலத்தை அபகரித்து வைத்திருந்த திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லோகிதாசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது, அது தனக்குச் சொந்தமான நிலம் எனத் தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்துக் கண்ணன் புகாரளித்த நிலையில், சம்மந்தப்பட்ட நிலமானது கண்ணனுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது.
இதையடுத்து லோகிதாஸ் பற்றி விசாரித்தபோது, அவர் பல ஆண்டுகளாக தனியார் பட்டா இடத்தில் பள்ளம் தோண்டி மண் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், அவரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.