தரங்கம்பாடி வானகிரி பகுதிகளில் சுருக்குமடி வலைகள் மற்றும் அதிவேக இயந்திர விசைப்படகைத் தடைசெய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டியும், கடலில் இறங்கியும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கடலோரப் பகுதிகளில் உள்ள 28 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் செய்து வரும் நிலையில், சிலர்ச் சுருக்குமடி வலை மற்றும் அதிவேக இயந்திர விசைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக மீனவ கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், அரசால் தடைச் செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடுக்கடலில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், தரங்கம்பாடி கடற்கரைப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து பேரணியாகச் சென்ற மீனவர்கள் நாகை – சென்னைத் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மீனவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மீனவர்களின் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.