சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டின் முக்கிய தலைவரான காய் கி-யைச் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
இந்தியா – சீனா இடையேயான உறவில் பல ஆண்டுகளாகவே விரிசல் நீடித்து வருகிறது. எல்லைப் பிரச்னை, பாகிஸ்தான் உடனான நெருங்கிய உறவு உள்ளிட்டவை அதற்கான பிரதான காரணமாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும் சீனாவுடன் சுமூக உறவைக் கடைபிடிக்க இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது.
இந்நிலையில்தான், 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டார். அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு எந்தளவு முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறதோ, அதற்கு இணையாகக் காய் கி என்பவரை மோடி சந்தித்துப் பேசியதும் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.
காய் கி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கிய தலைவராக உள்ளார். பொலிட்பீரோ நிலைக்குழு உறுப்பினராகவும் உள்ள அவர், அதிபர் ஜி ஜின்பிங்கின் வலது கரமாகக் கருதப்படுகிறார். சீன அரசு எடுக்கும் அனைத்து முக்கிய முடிவுகளிலும் இவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். மிகவும் கறாரான தலைவரான இவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிரிக்காத மனிதர் என அழைக்கப்படுகிறார்.
பெரும்பாலும் இவர் வெளிநாட்டுத் தலைவர்களை சந்திப்பதில்லை. மீறி அவர் சந்தித்தால் அது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாகத்தான் இருக்கும் என யூகித்துகொள்ளலாம். இப்படிப்பட்ட காய் கி-தான் தற்போது பிரதமர் மோடியைச் சந்தித்து பேசியுள்ளார்.
சுமார் 45 நிமிடங்களுக்கு இந்தச் சந்திப்பு நீடித்தது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்ட எந்த வெளிநாட்டுத் தலைவரையும் காய் கி சந்திக்கவில்லை என்பதில் இருந்தே, இந்தச் சந்திப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.
எல்லைப் பிரச்னை, இரு நாட்டு உறவை மேம்படுத்துதல், வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடியும், காய் கியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாகத்தான், லிபுலேக், ஷிப்கி லா, நாது லா உள்ளிட்ட எல்லைப் பகுதிகள் வழியாக வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது, நேரடி விமான சேவையை மீண்டும் தொடர்வது, விசா நடைமுறையை எளிதாக்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான காய் கியையும் அடுத்தடுத்து பிரதமர் மோடி சந்தித்தது, இரு நாட்டு உறவின் நேர்மறையான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.