நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று தொடர் விபத்துக்களை ஏற்படுத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வருகைத் தந்த சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மாருதி கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
பின்னர் அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் மணல் திட்டின் மீது மோதி நின்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பை பாதியில் முடித்துக்கொண்டு காரின் அருகில் சென்றார்.
அங்கு ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஸ்டீபன் என்பதும் அவர் தனது சகோதரியை அழைத்துச் செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதனை அடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஸ்டீபனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.