திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளரை, திமுக நகர்மன்ற பெண் உறுப்பினரின் காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் முனியப்பன் என்பவர் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த மாதம் 28ஆம் தேதி திண்டிவனம் திமுக நகர்மன்ற உறுப்பினர் ரம்யா ராஜா என்பவர் வார்டு பணிக்கான நிதி ஒதுக்குதல் கோப்பினை எடுத்து வருமாறு கேட்டுள்ளார்.
அப்போது, பணியில் இருந்த முனியப்பன் முறையாகப் பதிலளிக்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த நகர மன்ற உறுப்பினர் ரம்யா, முனியப்பனைத் தகாத வார்த்தையில் திட்டியதுடன், நகர்மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், நகராட்சி ஆணையர் அறைக்கு முனியப்பனை அழைத்த ரவிச்சந்திரன், மன்னிப்பு கேட்டுக்குமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து, நகர்மன்ற உறுப்பினர் ரம்யா ராஜாவின் காலில் விழுந்து இளநிலை உதவியாளர் அழுதப்படி மன்னிப்பு கேட்டார்.
இதனையடுத்து, பட்டியலினத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளரை காலில் விழ வைத்த நகர்மன்ற உறுப்பினர் மற்றும் நகர்மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கத் திமுக, அதிமுக, விசிக உறுப்பினர்கள் நகராட்சி ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
மேலும், நகராட்சி ஆணையர் இல்லாத நேரத்தில் அவருடைய அறைப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.