பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட THE RESISTENCE FRONT பயங்கரவாத அமைப்புக்குப் பாகிஸ்தான், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து நிதிஉதவி வழங்கப்பட்டது, தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதன்மூலம் பயங்கரவாதத்தின் புகழிடம் பாகிஸ்தான் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் சிக்கியுள்ளது. விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்….
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்ற தாக்குதலுக்கு லஷ்கர் – இ – தொய்பாவின் நிழல் அமைப்பான THE RESISTENCE FRONT பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், பஹல்காம் தாக்குதலுக்கு எங்கிருந்து நிதியுதவி கிடைத்தது என்ற புலன் விசாரணையில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ தீவிரமாகக் களமிறங்கியது.
அதன்படி, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த துடிக்கும் நபர்களின் தொலைபேசி உரையாடல்களை என்ஐஏ அதிகாரிகள் ரகசியமாக ஆய்வு செய்தனர். மொத்தம் 463 போன் கால்களை ரகசியமாகக் கேட்டதில், பாகிஸ்தான், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டது அம்பலமாகி உள்ளது.
குறிப்பாக, மலேசியாவில் வசிக்கும் யாசீர் ஹயாத் என்ற நபர், THE RESISTENCE FRONT பயங்கரவாத அமைப்புக்கு 9 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதை, என்ஐஏ அதிகாரிகள் உறுதிப்படுத்தனர். லஷ்கர் – இ – தொய்பாவின் முக்கிய தளபதியான சஜீத் மிர் உடன் யாசீர் ஹயாத் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
யாசீர் ஹயாத்தின் வங்கி பரிவர்த்தனைகள், தொலைபேசி உரையாடல்கள், சமூகவலைதள CHATகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் மூலம் என்ஐஏ அதிகாரிகள் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
இந்த உண்மைகள் அனைத்தும் திரைக்குப் பின்னால் இருந்து மட்டும் கண்டறியப்பட்டவை என நினைத்தால்…அதுதான் இல்லை… ஸ்ரீநகர், ஹந்த்வாரா உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் உயிரைப் பணயம் வைத்து நேரடியாகக் களமிறங்கி சோதனை மேற்கொண்டதன் பலன்தான் இது. சிறு சிறு துருப்பு சீட்டுகளையும் சாதாரணமாக எண்ணிவிடாமல், பயங்கரவாத கும்பலுக்கு அதிகாரிகள் வேட்டு வைத்துள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமையின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் அரண்டு போயிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு பாகிஸ்தான் என இந்தியா நீண்டகாலமாக குற்றம் சாட்டிய நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் அது ஏறத்தாழ உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது அதனை 100 சதவீதம் உறுதிப்படுத்தி இருக்கிறது என்ஐஏ.
இந்த ஆதாரத்தை FATF எனப்படும் நிதி நடவடிக்கைப் பணிக்குழுவிடம் சமர்ப்பிக்கும் போது, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் குரல் மேலும் வலுப்படும். இஸ்லாமபாத் ஆட்சியாளர்கள் பயங்கரவாதத்தின் பின்னணியாகச் செயல்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிடும்.
இதன் மூலம் சர்வதேச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் சாம்பல் பட்டியலில் மீண்டும் இணைந்து விடுவோமோ என ஷெபாஷ் ஷெரீப் அரசு ஏற்கனவே அச்சத்தில் ஆழ்ந்திருக்க, தொட்டால் விடமாட்டோம் எனச் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானைத் தொடர்ந்து ஓரம் கட்டி வருகிறது மத்திய பாஜக அரசு.