இந்தியா – சிங்கப்பூர் இடையிலான உறவு ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்டது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை பிரதமர் மோடி சந்தித்தார். கைகுலுக்கி அன்பை பரிமாறிக் கொண்ட இருநாட்டுத் தலைவர்கள், இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து இருநாட்டின் பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் இருநாடுகள் இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையடுத்து நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, பாதுகாப்பு துறையில் இருநாடுகள் இடையேயான உறவு வலுவடைந்து வருவதாகத் தெரிவித்தார்.
இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவு ஆழமானவை எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பசுமைக் கப்பல் போக்குவரத்து, திறன் மேம்பாடு, அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் பணியாற்றி வருவதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
உலகின் 4-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட லாரன்ஸ் வோங், எல்லையைக் கடந்தும் இதன் தாக்கம் உணரப்படுவதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இருதரப்பு உறவுகளையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது பற்றிப் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார்.