அகங்காரமா? ராஜதந்திரமா? என்று தெரியாத குழப்பத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கைகள் அமைந்துள்ளன. நீண்டகால நட்பு நாடான இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததன் மூலம், ட்ரம்ப் இமாலயத் தவறை செய்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபரான பிறகு, முப்பது நாட்களுக்குள் அவரைச் சென்று சந்தித்த முதல் உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். தனது “நல்ல நண்பர்” என்று பிரதமர் மோடியை, ட்ரம்ப் பாராட்டி இருந்தார்.
ஆறே மாதங்களில், எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. ட்ரம்ப் இந்தியாவுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறார். உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற கனவில், பல நாடுகளுடன் வர்த்தகப் போரை தொடங்கிய ட்ரம்ப்பின் வரி மிரட்டலுக்குச் சீனா அஞ்சவில்லை. மாறாக அமெரிக்கா மீது கடுமையான வரிகளை விதித்தது சீனா.
சீனாவை எதிர்ப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த ட்ரம்ப், சீனாவை விட்டு விட்டு, இந்தியா பக்கம் திரும்பினார். இந்தியாவைப் பணிய வைத்தால், உலகில் பிற நாடுகள் எல்லாம் தம் கட்டுப் பாட்டுக்கு வந்துவிடும் என்று ட்ரம்ப் தப்புக் கணக்கு போட்டார்
ஆசிய நாடுகளிலேயே அதிகப் பட்சமாக இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்தார். இதுதவிர, பிரிக்ஸ் அமைப்பில் இருப்பதற்காக, இந்தியா மீது கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். இந்தியாவைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த ஆசியாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து விட முடியும் என்று ட்ரம்ப் பகல் கனவு கண்டார்.
ஆனால், தனது தவறான நடவடிக்கைகளால் இந்திய- அமெரிக்க உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளார் ட்ரம்ப். கடுமையாகப் பேச்சுவார்த்தை நடத்தி அறையில் ஆதிக்கம் செலுத்தும் தனது திறனைப் பற்றித் தானே பெருமைப் பேசும் ட்ரம்ப், இந்தியாவிடம் சறுக்கி இருக்கிறார் என்று சொல்லப் படுகிறது.
மென்மையான நாடு என்று அறியப்பட்ட இந்தியா, அமெரிக்காவின் கட்டளைக்கு எதிராகப் போகாது என்று நம்பியிருந்த ட்ரம்புக்குப் பிரதமர் மோடி தலைமையிலான புதிய இந்தியாவின் பரிணாம வளர்ச்சி தெரியாமல் போனது தான் துரதிர்ஷ்டம்.
வர்த்தக ஒப்பந்தத்தில் கூட அமெரிக்காவின் நிபந்தனைகளை இந்தியா புறக்கணித்தது. தனது வெளியுறவுக் கொள்கையில் இந்தியா உறுதியாக நின்றது. ஏற்கெனவே ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் நல்ல வர்த்தக உறவுகளை பேணி வரும் இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன் தனது வர்த்தக உறவுகளை மேம்படுத்த தொடங்கியுள்ளது.
இதற்கிடையே,ரஷ்ய அதிபர் புதின் உட்பட 20 க்கும் மேற்பட்ட சர்வதேச நாட்டின் தலைவர்கள் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின் பங்கேற்பு தான் சீனா தலைமையிலான புதிய உலக ஒழுங்கு ஏற்பட உதவியது. கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாகச் சீனாவுக்குச் சென்ற பிரதமர் மோடியே சர்வதேச கவனத்தைப் பெற்றார்.
ஆனாலும் சீன தலைமையிலான அணியில் இந்தியா இல்லை என்பதை உறுதி படுத்தவே, சீனாவுக்குச் செல்லும் முன் சீனாவின் பரம எதிரியான ஜப்பானுக்குச் சென்றார் பிரதமர் மோடி. மேலும், சீனாவின் உலகப் போர் வெற்றி அணிவகுப்பிலும் கலந்து கொள்ளவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ட்ரம்ப் என்ற பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையில், இந்தியா துணிச்சலாக அமைதியாக அதை செய்திருக்கிறது. இது ட்ரம்பின் வரை விதிப்பால் பாதிக்கப்படும் மற்ற நாடுகளுக்கும் ஒரு தைரியத்தைக் கொடுத்துள்ளது.
ரஷ்யா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் மற்றும் அரபு நாடுகள் இனி அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நாட்டின் நலன்களைச் சமரசம் செய்யாமல் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்வது பிரதமர் மோடியின் வெளியுறவு அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி ஆகும். பிரதமர் மோடியின் இந்த ராஜதந்திர நகர்வு, ட்ரம்பின் உலக ஆதிக்கக் கனவைத் தகர்த்துள்ளதாக நம்பப்படுகிறது.