இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான பாண்டியா சகோதரர்களின் ஆக்ரோஷமான ஆட்டம் அனைவரும் அறிந்ததே. அதிரடிக்குப் பெயர் போன அவர்களின் இளகிய மனம், ஆசிரியர் தினத்தின் மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களாக அறியப்படும் பாண்ட்யா சகோதரர்களான ஹர்திக் மற்றும் க்ருணால் ஆகிய இருவரும், மைதானத்தில் கடுமையான போட்டியாளர்களாக அறியப்படுபவர்கள். ஐபிஎல் போட்டியில் எதிரெதிர் அணியில் ஆக்ரோஷமாக விளையாடி மைதானத்தில் ஆதிக்கம் செலுத்திக் கூடிய இருவரும், தனது பயிற்சியாளருக்கு எப்படியெல்லம் உதவியிருக்கிறார்கள் என்ற செய்திதான் ஆசிரியர் தினத்தையொட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏராளமான போட்டிகள், எத்தனையோ சவால்கள் எனப் பலவற்றையும் கடந்து வந்த இருவரும், தங்களது இளமைக் கால கிரிக்கெட் பயிற்சியாளர் ஜிதேந்திர சிங்கை தற்போதும் நினைவில் வைத்து அவருக்கு உதவி வருகின்றனர்.
பயிற்சியாளர் ஜிதேந்திர சிங்கை தங்களது நெருங்கிய குடும்ப உறுப்பினரைப் போலவே எண்ணி, அவருக்கு உதவி வருகின்றனர் பாண்ட்யா சகோதரர்கள். கிரிக்கெட் பயிற்சியாளர் ஜிதேந்திர சிங்கின் முதல் சகோதரியின் திருமணம் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது அவருக்குப் பணம் கொடுத்த உதவியிருக்கின்றனர்ப் பாண்ட்யா சகோதரர்கள்.
அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜிதேந்திர சிங்கின் இரண்டாவது சகோதரியின் திருமணத்தின்போது கார் வாங்க 20 லட்சம் ரூபாய் கொடுத்து உதவிய இருவரும், பிற பரிசும் பொருட்களையும் வழங்கி ஆதரவை நல்கியுள்ளனர். இதுகுறித்து நெகிழ்சியாகப் பேசியுள்ள ஜிதேந்திர சிங், உங்கள் சகோதரரி தமது சகோதரி போல்தான் என்று ஹர்திக் குறிப்பிட்டதாகச் சுட்டிக்காட்டி நெகிழ்ந்துள்ளார். தனது சகோதரிகளின் திருமணத்திற்கான அனைத்துத் தேவைகளையும் அவர்கள் கவனித்துக் கொண்டதாகவும் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.
பயிற்சியாளர் ஜிதேந்திராவின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டிருந்தபோதும் அவருக்கு ஹர்திக் உதவியுள்ளார். அதுகுறித்து மனம் திறந்துள்ள ஜிதேந்திரா, தனது தாயின் உடல்நிலை சரியில்லாததை அறிந்ததும் தயவுசெய்து தன் பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு அவருக்கான சிகிச்சையை உறுதிப்படுத்துமாறு ஹர்திக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
இது அவர்களின் தாராள மனப்பான்மைக்கான முதல் எடுத்துக்காட்டு என்றும் ஜிதேந்திரா நெகிழ்வுடன் கூறியிருக்கிறார். “2015-16ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு ஹர்திக் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு காரைப் பரிசளித்திருக்கிறார். பொருளாதார ரீதியாக வலுவாக இல்லாத சூழலிலும் ஹர்திக் தனக்குக் காரை பரிசளித்தபோது ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளார் ஜிதேந்திரா.
2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் வெற்றிக்குப் பிறகும், ஹர்திக்கும், க்ருனாலும் தனது பயிற்சியாளருக்கு நிதியுதவி அளித்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கும் பின்னும் பயிற்சியாளருக்குப் பாண்ட்யா சகோதரர்கள் உதவியிருக்கின்றனர்.
இவ்வாறாகப் பாண்டியா சகோதரர்களிடமிருந்து சுமார் 80 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி கிடைத்திருப்பதாகவும், அவர்கள் மாணவர்களாகக் கிடைத்தது தமக்கு கிடைத்த மிகப்பெரும் அதிர்ஷ்டம் என்றும் நெகிழ்ந்துள்ளார் பயிற்சியாளர் ஜிதேந்திரா. இதன் மூலம் பாண்ட்யா சகோதர்களின் உதவும் மனம் உலகிற்குத் தெரியவந்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.