வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பிரதமர் மோடி விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததுள்ள காரணத்தால் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. குறிப்பாக யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியது.
இது கடந்த 60 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதே போல், ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியிலும் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் அதிகரித்ததால் அது மக்கள் வசிக்கும் பகுதியில் சென்று சூழ்ந்துள்ளது.
அதே போல் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணியாளர்கள் சென்றடைய முடியாத நிலை நீடிக்கிறது, இதனால் டிரோன்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சென்று, அங்குள்ள நிலைமையை பிரதமர் மோடி விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.