அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தியிருந்தார்.
அதற்காக 10 நாட்கள் கெடு விதிப்பதாகவும், இல்லையென்றால் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கப் போவதில்லை எனவும் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சார பயணத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கலில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையனின் முக்கிய அதிமுக பதவிகளை பறித்தபோதும், அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிடவில்லை.
அதே போல செங்கோட்டையனின் ஆதரவாளர்களான நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.ஏ.சுப்பிரமணியன், ஈஸ்வரமூர்த்தி, குறிஞ்சிநாதன், தேவராஜ், ரமேஷ், வேலு ஆகியோரின் கட்சி பதவியையும் பறித்து இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.