இந்தியாவுடன் சமூக உறவை பேண சீனா முடிவெடுத்துள்ள அதே நேரத்தில், பாகிஸ்தான் உடனான உறவை கைவிடவும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டு வந்தது சீனா. நிதி உதவி வேண்டுமா? தருகிறேன். ஆயுதங்கள் வேண்டுமா? தருகிறேன். உட்கட்டமைப்பு மோசமாக உள்ளதா?. கவலை வேண்டாம். அதனையும் நானே பார்த்துகொள்கிறேன், எனப் பாகிஸ்தானுக்கு பார்த்துப் பார்த்து செய்து வந்தது சீன அரசு.
ஒருகட்டத்தில், தனக்கு எந்த ஒரு பிரச்னை என்றாலும் மேலே உள்ள சீனா பார்த்துகொள்ளும் என்ற மனநிலைக்குப் பாகிஸ்தான் வந்தது. ஆனால், அமெரிக்காவின் அடாவடியான 50 சதவீத வரிவிதிப்புக்குப் பிறகு காட்சிகள் மாற தொடங்கின. அமெரிக்கா என்ற உலகத் தாதாவுக்கு எதிராக, இந்தியாவும் சீனாவும் கரம்கோர்க்க முன்வந்தன.
அதற்கான அடித்தளத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு அமைத்துக் கொடுத்தது. மோடியும், ஜி ஜின்பிங்கும் நேரில் சந்தித்துப் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் கைக் கோர்த்துகொண்டு முஸ்தப்பா முஸ்தப்பா எனப் பாடல் மட்டும்தான் பாடவில்லை. மற்றபடி, அனைத்து விவகாரங்களிலும் ஒன்றிணைந்து செயல்படும் முடிவுக்கு இரு தலைவர்களும் வந்துள்ளனர்.
சீனாவும், இந்தியாவும் இணைந்தால் அமெரிக்காவுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படும். அதற்கு அடுத்தபடியாக அதிகப் பாதிப்பை சந்திக்கவுள்ள நாடு, பாகிஸ்தான்தான். அதற்கான சமிக்ஞைகள் தற்போதே தெரிய தொடங்கிவிட்டன.
பாகிஸ்தான் அரசு கராச்சி -ரோஹ்ரி இடையே ரயில்வே பாதை அமைத்து வருகிறது. கராச்சி மற்றும் பெஷாவர் இடையேயான 1,726 கிலோ மீட்டர் தூரத்தை இணைப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். பலுசிஸ்தான் பகுதியில் அமையவுள்ள சுரங்கங்களில் இருந்து கனிமங்களை எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தப் ப்ராஜெக்டின் மொத்த வேல்யூ, சுமார் 60 ஆயிரம் கோடி. இதில் கணிசமான தொகையை வழங்குவதாகச் சீனா தெரிவித்திருந்தது. ஆனால், அந்தத் தொகையை வழங்க சீன அரசு தற்போது மறுத்து விட்டது.
சீன மின்நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய 13 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையைப் பாகிஸ்தான் வழங்காமல் உள்ளது, கராச்சி – பெஷாவர்த் திட்டத்தில் பணியாற்றிய சீனர்கள் பிரிவினைவாதிகளால் கொல்லப்பட்டது, பாகிஸ்தானின் அமெரிக்கப் பாசம் உள்ளிட்டவை இதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்தப் பட்டியலில், சீனா- இந்தியா இடையே ஏற்பட்டுள்ள சுமூக உறவும் பிரதான காரணமாகத் தற்போது இணைந்துள்ளது.
சீனா கையை விரித்து விட்டதால், ஆசிய மேம்பாட்டு வங்கியின் கதவைப் பாகிஸ்தான் தட்டியுள்ளது. தங்களுக்கு உடனடியாக 2 பில்லியன் டாலர்த் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று நிதி கேட்டுச் சர்வதேச நாணய நிதியத்தின் வாசலில் பாகிஸ்தான் நின்றது. இன்று ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கிறது. நாளை எங்கு போய் நிற்கும் என்பது இனிதான் தெரியும்.