இந்தியாவுக்கு எதிராகக் காற்றில் வாள் சுழற்றிக்கொண்டிருந்த ட்ரம்ப், தற்போது இந்தியாவுடன் நேசக்கரம் நீட்ட தொடங்கியுள்ளார். காரணம் என்ன. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
சில தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது மற்றவர்களுக்குப் புரியாது. புதின், ஜி ஜின்பிங், கிம் ஜாங் உன் உள்ளிட்டோர் இதற்குச் சிறந்த உதாரணம்.
மறுபுறம், சில தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே புரியாது. அதற்கு ஆக சிறந்த ஒரே எடுத்துக்காட்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப்.
காலகாலமாக அமெரிக்காவுடன் இந்தியா நட்புறவு பாராட்டி வருகிறது. முந்திய அமெரிக்க அதிபர்கள் அனைவரும் இந்தியாவைத் தங்கள் அணியில் தக்கவைக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இரு நாடுகள் இடையேயான இந்த நல்லுறவுக்கு ஒரே இரவில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ட்ரம்ப்.
இந்தியாவுக்கு அதிக வரி விதித்தால், ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியா கரம் கோர்க்கும், தனது வர்த்தகத்தை மற்ற நாடுகளுடன் மேற்கொள்ளத் தொடங்கும், இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படும், ரஷ்யாவின் கை ஓங்கும் என்பதெல்லாம் சிறு குழந்தைகூட தெரியும்.
ஆனால், ட்ரம்ப் இதனையெல்லாம் புரிந்துகொள்ளவே இல்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என வரி விதித்தார். இதில் உள்ள அபத்தத்தைப் பலர் சுட்டி காட்டிய போதிலும், தான் பிடித்த முயலுக்கு 3 கால் என விடப்பிடியாக நின்றார்.
ஆனால், ட்ரம்ப் எடுத்த முடிவு தவறு என்பதைக் காலம் அவருக்கு உணர்த்திவிட்டது. ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியா கரம்கோர்த்துவிட்டது. ட்ரம்புக்கு எதிராகச் சொந்த கட்சியிலேயே எதிர்ப்பும் கிளம்ப ஆரம்பித்து விட்டது.
இனியும் தாமதித்தால், நிலைமை குடி முழுகி போய்விடும் என்பதை உணர்ந்த ட்ரம்ப், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வரத்தொடங்கியுள்ளார்.
இதற்குத் தொடக்கபுள்ளியாக அமைந்தது ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவு. அதில், இந்தியாவையும், ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டது போல் தெரிவதாகவும், அந்த 3 நாடுகளும் நன்றாக இருக்கட்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடிக்கு நல்ல நண்பராக இருப்பேன் எனவும், மோடி ஒரு சிறந்த பிரதமர் எனவும் கூறினார். மேலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சக்திவாய்ந்த உறவு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதைப்பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட மோடி, அதிபர் ட்ரம்பின் கருத்துக்களையும், பாசிட்டிவான மதிப்பீட்டையும் பாராட்டுவதாகக் கூறினார். மேலும், இந்தியாவும் அமெரிக்காவும் நேர்மறையான மற்றும் தொலைநோக்கு பார்வையுடைய கூட்டாளிகளாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபராக இருந்துகொண்டு ஒரே அடியாக இறங்கி வந்தால் நன்றாக இருக்காது என்பதால், இப்படிப் படிப்படியாக இறங்கி வந்துகொண்டுள்ளார் டிரம்ப்.
அமெரிக்காவின் மூத்த தலைவர்களும் இந்தியா குறித்து தற்போது நேர்மறையாகப் பேசத்தொடங்கியுள்ளனர். இப்படி, ட்ரம்பும், அவரது பரிவாரமும் இந்தியாவை நோக்கி வெள்ளைக்கொடியை உயர்த்த ஆரம்பித்துள்ளது.
இந்தியா எந்த நாட்டையும் பகைத்துகொள்ள விரும்பாது. அனைவருடனும் நட்பு பாராட்டவே விரும்பும். ஆகவே, அமெரிக்காவுடன் இந்தியா நட்பு பாராட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், முன்பு இருந்த அதே அளவிலான சுமூக உறவு இனி இருக்குமா என்பது சந்தேகம்தான்.