சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த ‘Gen Z’ இளைஞர்கள் போராட்டத்தால் நாடே போர்க்களமாக மாறியுள்ளது. இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? என்ன நடக்கிறது நேபாளத்தில் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நேபாள உச்சநீதிமன்றம், முறையாகப் பதிவு செய்யாத சமூக வலைதளங்களைத் தடைச் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, நாட்டில் அனுமதி இல்லாமல் இயங்கும் சமூக வலைதளங்கள் எல்லாம் முறையாக அரசிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்றும், குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் நேபாள அரசு உத்தரவிட்டது. இதற்கு 10 நாள் கெடுவும் விதிக்கப்பட்டது.
இதையடுத்துப் பதிவு செய்யாமல் இயங்கி வந்த இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்ஆப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களைக் கடந்த வெள்ளிக்கிழமை நேபாள அரசு தடை விதித்தது. நேபாள அரசின் இந்த நடவடிக்கை, அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, சமூக வலைதளங்களுடன் ஒன்றி வாழும் GEN Z தலைமுறையினரால் அரசின் இந்தத் தடையுத்தரவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
முன்னதாக, சீனாவைச் சேர்ந்த டிக்-டாக் நிறுவனம் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அரசின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தது. எனவே டிக் டாக்-க்குத் தடை விதிக்கப்படவில்லை. நேபாளத்தில் டிக் டாக் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. அரசுக்கு எதிராகப் போராட, டிக் டாக் வீடியோக்கள் மூலமாகவே இளைஞர்களுக்கு அழைப்புகள் விடுக்கப் பட்டன.
#NepoKid, #NepoBabies மற்றும் #PoliticiansNepoBabyNepal போன்ற ஹேஷ்டேக்குகளைக் கொண்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் ஏராளமாகப் பரவின. அரசியல்வாதிகளின் குழந்தைகள் சலுகைக் காரணமாக வெற்றிப் பெறும்போது, நாட்டின் ஏழை குழந்தைகள் கஷ்டப்படுவதா ? என்ற கேள்விகளை டிக் டாக் வீடியோக்களில் நேபாள இளைஞர்கள் கோபமாக எழுப்பியிருந்தனர்.
அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கை முறையையும், சாதாரண மக்களின் வறுமையையும் ஒப்பிட்டும் வீடியோக்கள் பரவின. பல ஆண்டுகளாகவே நேபாள இளைஞர்கள் மனதில் குமுறிக்கொண்டிருந்த கோபம்தான் இந்தப் போராட்டமாக வெடித்துள்ளது. வேலையின்மை, வறுமை, மற்றும் அரசின் ஊழல்கள் எனப் பல்வேறு பிரச்சனைகளால் நாட்டின் இளைஞர்கள் விரக்தியின் உச்சத்தில் இருந்தனர்.
இதில் சமூக வலைதளத் தடை என்பது ஒரு தீப்பொறி தான். நேபாளத்தில் ‘Gen Z’ இளைஞர்களின் போராட்டம் பற்றி எரிந்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தலைநகர் காத்மாண்டுவில் கூடி, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் தலைவர்களின் குழந்தைகள் வெளிநாட்டிலிருந்து Gucci போன்ற ஆடம்பர விலையுர்ந்த பைகளுடன் திரும்பி வருகிறார்கள்.மக்களின் குழந்தைகள் சவப்பெட்டிகளில் உள்ளனர். நிலநடுக்கத்துக்கான அவசியம் நேபாளத்தில் இல்லை- தினமும் ஊழலால் நேபாளம் நடுங்கிக்கொண்டுதான் உள்ளது. இது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைப் போராட்ட இளைஞர்கள் ஏந்தியிருந்தனர்
ஊழலை தடுக்க திராணியற்ற அரசு, சமூக வலைதளங்களுக்குத் தடை விதிப்பது ஏன்? என்ற கோஷத்தை ஆவேசமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் எழுப்பியுள்ளனர். இந்தச் சூழலில், போராட்டத்தில் ஈடுபட்ட GEN Z இளைஞர்கள், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். காவல்துறையினர்ப் போராட்டத்தைக் கலைக்கத் தடியடி நடத்தினர். கண்ணீர்ப் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகள் வீசி போராட்டத்தைத் தடுத்தனர். துப்பாக்கிச் சூடும் நடத்த பட்டது.
19 இளைஞர்கள் உயிரிழந்த நிலையிலும், GEN Z இளைஞர்கள் போராட்டத்தில் இருந்து பின் வாங்கவில்லை. தொடர்ந்து, போராடி வருகின்றனர். காவல் துறையினர் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசி பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
((இந்தச் சூழலில், பிரதமர் கட்கா பிரசாத் ஒலி தலைமையில் நடந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.) சமூக வலைத் தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவும் திரும்ப பெறப் பட்டுள்ளது.
என்றாலும், சமூக ஊடகங்கள் தடைக்கு எதிரான போராட்டம், நாட்டின் எதிர்காலத்துக்கான போராட்டம் உருமாறியுள்ளது. ((பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து இளைஞர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ))
ஏற்கெனவே, 15 முதல் 29 வயதுடையவர்களில் சுமார் 19.2 சதவீத இளைஞர்கள்,வேலைவாய்ப்பு இல்லாததால் வறுமையில் சிக்கியுள்ளனர். பெரும்பாலோர் ரஷ்யா- உக்ரைன் போரில் கூலிப்படையினர் போன்று ஆபத்தான வேலைகளைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
‘Gen Z’ இளைஞர்களின் போராட்டம் நேபாளத்தின் அரசியல் மற்றும் சமூக அமைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குமா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.