அமெரிக்காவில் ஹூண்டாய் தொழிற்சாலையில், பணிபுரிந்த தென்கொரிய நாட்டைச் சேர்ந்த 300 பேர் உட்பட 475 பேரை ட்ரம்ப் அரசு கைது செய்துள்ளது. அவர்கள் கை,கால்களில் விலங்கிடப்பட்ட புகைப்படங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இரண்டாவது முறை அதிபராகப் பதவியேற்ற முதல்நாளிலே தெற்கு எல்லைப் பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை உடனடியாகத் தொடங்கப்பட்டது. சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது செய்யப்பட்டு, அந்தந்த நாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கானோர் சட்டவிரோதமாகப் பணியாற்றி வந்துள்ளனர்.
இதையடுத்து, அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த 450-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் 300 ஊழியர்கள் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
நூற்றுக்கணக்கான கொரிய தொழிலாளர்கள் குற்றவாளிகளைப் போல கணுக்கால், மணிக்கட்டு மற்றும் இடுப்பில் விலங்கிடப்பட்டிருப்பதைக் காட்டும் வீடியோக்களும் புகைப்படங்களும் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோக்கள் கொரியாவில் மட்டுமல்ல, ஜப்பான், தைவான் என அமெரிக்காவில் பெரிய முதலீடுகள் செய்துள்ள நாடுகளிலும் வைரலாகி உள்ளன. தொழிலாளர்களை மீட்க அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் இறுதி செய்யப் பட்டுள்ளதாகவும், பத்திரமாகத் தாய் நாடு திரும்ப தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.
விசிட்டர் விசாக்களை மோசடியாகப் பயன்படுத்துவதாகவும், B -1 எனப்படும் விசா காலம் முடிந்த சட்ட விரோதமாகத் தங்கி இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவில் தொழில் தொடங்கும் பிறநாட்டு நிறுவனங்களுக்கு, அமெரிக்காவின் விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை இந்த நடவடிக்கை உதவும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் (Kristi Noem) கிறிஸ்டி நோயம் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களை கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களைக் காப்பாற்ற சட்ட ஆலோசனையில் இறங்கி உள்ளன.
ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, மிகவும் வித்தியாசமாகவும் கணிக்க முடியாததாகவும் செயல்படுகிறது என்று சர்வதேச வணிக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.