நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நேபாள நாட்டில் உள்ள அனைத்துச் சமூக வலைத்தளங்களும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவைப் பின்பற்றாத 26 சமூக ஊடகங்களை நேபாள அரசு முடக்கி நடவடிக்கை எடுத்தது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து பெரும் போராட்டம் வெடித்தது.
இந்தப் போராட்டத்திற்கு மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் நேபாள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதித்த தடையை நேபாள அரசு திரும்பப்பெற்றது. இருப்பினும் நீடித்த வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு படையினரும் காயமடைந்தனர்.
கட்டுக்கடங்காத இந்த வன்முறையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் இல்லங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேபாள நாட்டின் நிதித்துறை அமைச்சரை போராட்டக்காரர்கள் தாக்கினர். மேலும் நேபாள பிரதமர் சர்மா ஒலியின் இல்லம் சூறையாடப்பட்டுத் தீ வைத்து எரிக்கப்பட்டது.
ஏற்கெனவே நேபாள உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பதவி விலகிய நிலையில் நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகப் பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் ராணுவ கட்டுப்பாடு வர உள்ளதாகக் கூறப்படும் நிலையில் சர்மா ஒலி நாட்டை விட்டு வெளியேற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் நேபாளத்தில் நிலைமை மோசமாக உள்ளதால் இந்தியர்கள் அங்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.