டெல்லியில் இன்று நடந்த குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 452 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் (74) உடல்நிலையை காரணம் காட்டி, ஜூலை 21ல் ராஜினாமா செய்தார். இதையடுத்து, 15வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.
எதிர்க்கட்சியான இண்டி கூட்டணி சார்பில், தெலுங்கானாவைச் சேர்ந்தவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான சுதர்ஷன் ரெட்டி களமிறக்கப்பட்டார்.
இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. முதல் நபராக பிரதமர் மோடி தனது ஓட்டை பதிவு செய்தார். பிறகு அனைத்து மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள், உள்ளிட்ட எம்பிக்களும் தங்களது ஓட்டினை பதிவு செய்தனர். இந்த தேர்தலை பாரதிய ராஷ்ட்ரீய சமிதி, பிஜூ ஜனதா தளம் மற்றும் அகாலிதளம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.
தேர்தல் முடிவடைந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கிய சி.பி.ராதாகிருஷ்ணன் 452 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.