மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இவை காரணமாக தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கன்னியாகுமரி கடற் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.