மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இதே போல விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நீர்மட்டம் உயரும் என்பதால் ஆடி பட்டத்தில் விதை விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்களும் நிம்மதி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், காந்தல், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இதேபோல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பள்ளிபாளையம், ஆவரங்காடு, கண்டிப்புதூர், ஓடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அய்யர்மலை, தோகைமலை, மாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் போடியகவுண்டன்பட்டி கிராமத்தில் கனமழையின்போது மின் கம்பி அறுந்து விழுந்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.