தமிழகத்தில் போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுகிறது. நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள போத்தீஸ் ஜவுளிக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி மேலபுலிவார் சாலையில் இயங்கி வரும் போத்தீஸ் ஜவுளி கடையிலும், சின்ன கடை வீதியில் உள்ள போத்தீஸ் நகைக் கடையிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 2 கார்களில் வந்த அதிகாரிகள், கடைகளில் உள்ள ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கின் விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னையில் தி. நகரில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடையில் காலை முதல் சோதனை நடைபெற்று வரும் நிலையில், ஆர்.ஏ.புரத்தில் வசிக்கும் உரிமையாளர்களில் ஒருவரான ரமேஷ் என்வரின் வீட்டிலும், நீலாங்கரையில் உள்ள கடை உரிமையாளரின் மகன்களான போத் ராஜா மற்றும் அசோக் ஆகியோரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.