உசிலம்பட்டி அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் திடீரெனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்திற்கு செல்லும் சாலைச் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சேதமடைந்துள்ளதாகவும், கடந்த ஓராண்டாகச் சீரமைக்கப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உசிலம்பட்டி- பேரையூர்
செல்லும் நெடுஞ்சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.