நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்திற்கு நீர்கசிவு காரணமாக இருக்கலாம் என, அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில், 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமான விபத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதுவரை எதுவும் உறுதி செய்யப்படாத நிலையில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்த 110 பேரின் குடும்பத்தினர், ஏர் இந்தியா மற்றும் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனமான பீஸ்லி ஆலன் சார்பில் நடத்தப்படும் இந்த வழக்கில், மைக் ஆண்ட்ரூஸ் என்ற பிரபல வழக்கிறஞர் வாதாடி வருகிறார்.
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை எனவும், விபத்து தொடர்பான முதல் தகவல் அறிக்கைப் பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், விமானத்தின் வடிவமைப்பு இந்த விபத்துக்கு முக்கியான காரணமாக அமைந்திருக்குமோ எனவும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார். கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த நீர்க்கசிவு ஏற்பட்டு, மின்சாரப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறும் அவர், இது தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ள தகவல்களை மேற்கோள்காட்டியுள்ளார்.
நீர்க் கசிவுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்றால், விமானத்தை வடிவமைத்த போயிங் நிறுவனம்தான் அதற்கு பொறுப்பேற்ற வேண்டும் என வழக்கிறஞர் மைக் ஆண்ட்ரூஸ் வலியுறுத்தியுள்ளார். தனது சட்ட நிறுவனம் இன்னும் கூடுதல் ஆவணங்களைச் சேகரித்து வருவதாகவும், துறைச் சார்ந்த வல்லுநர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர்த் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏர் இந்தியா இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் இது தொடர்பாகப் பேசியிருந்த அவர், இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், ரத்தன் டாடா மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், இத்தகைய சூழலே வந்திருக்காது எனவும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
















