இந்திய விமானப்படையின் பிரம்மாஸ்திரமாக விளங்கும் ரஃபேல் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்திய ராணுவத்தை மேலும் வலிமைப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, விமானப்படையை அதிநவீனப்படுத்தும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், அதிகச் செயல் திறன்கொண்ட ஜெட் என்ஜிகள் உள்ளிட்டவற்றை வாங்கவும், சுதர்சன் சக்ர வான் பாதுகாப்பு அமைப்பைத் தயாரிக்கவும் தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்தான், விமானப்படையில் ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ராணுவத்திற்குத் தேவையான அனைத்து ரஃபேல் விமானங்களும் வெளிநாட்டிடம் இருந்தான் வாங்கப்பட்டு வந்துள்ளன. இந்தமுறை, அந்த விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கான முன்மொழிவை இந்திய விமானப்படை, பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 114 ரஃபேல் விமானங்களை இந்திய விமானப்படைத் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ராணுவ தளவாட உற்பத்தியில் இதுதான் மிகப்பெரிய உச்சமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேக் இன் இண்டியா திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து, பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் இந்த ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 60 சதவீத்திற்கும் அதிகமான பங்கு இந்தியாவைச் சேர்ந்ததாக இருக்கும்.
மேலும், ரஃபேல் விமானங்களின் எம்-88 என்ஜின்களுக்கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பழுதுநீக்கப் பணிகளுக்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஹைதராபாத்தில் ஆலை ஒன்றை அமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ரஃபேல் விமானங்கள் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியிருந்தன. இதனையடுத்தே, அந்த விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்திய விமானப்படையில் 36 ரஃபேல் விமானங்கள் உள்ளன. மேற்கொண்டு 26 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தமும் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில், உள்நாட்டில் மேலும் 114 விமானங்கள் தயாரிக்கப்படும்பட்சத்தில், அவற்றின் மொத்த எண்ணிக்கை 176ஆக உயரும். அதன்மூலம், இந்திய விமானப்படையின் வலிமை ஈடுஇணையற்ற ஒன்றாக உருவெடுக்கும் என அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
















