ஜார்ஜியாவில் அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட தென்கொரிய தொழிலாளர்களை எட்டு நாட்களுக்குப் பிறகு, தனிவிமானத்தில் அந்நாட்டு அரசு பத்திரமாக அழைத்து வந்துள்ளது. அதிபரின் தலைமைத் தளபதி காங் ஹூன்-சிக், இஞ்சியோன் சர்வதேச விமான நிலையத்துக்கு நேரிலேயே சென்று தொழிலாளர்களை வரவேற்றுளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஹூண்டாய்-எல்ஜி பேட்டரி தொழிற்சாலையில், பல தென்கொரிய தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர். கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி, அமெரிக்கக் குடியேற்ற துறை அதிகாரிகள் அந்தத் தொழிற்சாலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மொத்தம் 475 தொழிலாளர்கள் சட்ட விரோதமாக உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்டோர் தென் கொரிய தொழிலாளர்கள் உட்பட கைது செய்யப் பட்ட அனைவரும், கைகள், கணுக்கால் மற்றும் இடுப்பில் சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தனது முக்கிய நட்பு நாடான தென் கொரியாவின் தொழிலாளர்களைப் போர்க் கைதிகளைப் போல அமெரிக்கா நடத்தி இருப்பது, தென் கொரிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனே அமெரிக்காவுக்குச் சென்ற தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூன் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்து, தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட வீடியோ பகிரங்கமாக வெளியிடப்பட்டதால், தனது நாட்டு மக்கள் “பெரும் வேதனைகளையும் அதிர்ச்சியும்” அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தென் கொரிய தொழிலாளர்களுக்குப் புதிய விசா வகையை அறிமுகப்படுத்த தென் கொரியா-அமெரிக்கக் கூட்டுப் பணிக்குழுவை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கைது செய்யப்பட்ட தென் கொரிய தொழிலாளர்களுக்கு ஒரு சலுகையை வழங்கினார். அதன்படி, அவர்கள் அமெரிக்காவிலேயே தங்கி, அமெரிக்கர்களுக்குப் பயிற்சி அளிக்க முன்வந்தால், அவர்களுக்குத் தொடர்ந்து அங்கு தங்க அனுமதி வழங்கப்படும் என ட்ரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், ட்ரம்பின் இந்தச் சலுகையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதற்கே விருப்பம் தெரிவித்தனர் என்று தென் கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தாயகம் திரும்பிய 330 தொழிலாளர்களில், ஹூண்டாய் நிறுவனத்தைச் சேர்ந்த 66 தொழிலாளர்களும், 264 எல்ஜி நிறுவனத் தொழிலாளர்களும் இருந்தனர். எல்ஜி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகள் மூலம் தொழிலாளர்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொழிலாளர்களுக்கு ஒரு மாத கால சம்பளத்துடன் விடுப்பும், உடல் மற்றும் மன நலனுக்கான கூடுதல் சுகாதார சிகிச்சையும் அளிக்கப்படும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதிபராக 100வது நாளைக் குறிக்கும் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தென்கொரிய அதிபர் லீ, தென் கொரிய தொழிலாளர்களைக் கைது செய்தது, இருநாடுகளுக்கும் இடையே நிச்சயமற்ற வர்த்தக-வணிகச் சூழலை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இனி, தென் கொரிய நிறுவனங்களை அமெரிக்காவில் முதலீடு செய்வதை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தங்கள் நாட்டுக்குள் சுற்றுலா விசாக்களில் வந்த அமெரிக்கர்கள், மொழி நிறுவனங்களில் ஆங்கிலம் கற்பிப்பதைச் சரியானது என்று தென்கொரியா நினைக்கிறது. ஆனால், அமெரிக்கா மட்டும் தென்கொரிய தொழிலாளர்களைச் சட்ட விரோதக் குடியேற்றமாக கருதி கடுமையாக நடவடிக்கை எடுக்கிறது.
இனி பொருத்தமான விசா இல்லாமல் தென்கொரியாவில் அமெரிக்கர்கள் ஆங்கிலம் கற்பிப்பது சட்டவிரோதமாக்கப்படும் என்றும், அதற்கு அபராதம், நாட்டை விட்டு வெளியேறும் உடனே உத்தரவுகள் மற்றும் மறு நுழைவுத் தடைகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும், அமெரிக்காவின் 25 சதவீத வரியை 15 சதவீதமாகக் குறைப்பதற்கான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில், தேசிய நலன்களுக்கு எதிரானதாகக் கருதப்படும் எந்த முடிவையும் அரசு எடுக்காது என்றும் தென்கொரிய அதிபர் லீ உறுதிப்படுத்தியுள்ளார்.