2023ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக மணிப்பூர் சென்றார். அங்கு அம்மாநில மக்களுடன் கலந்துரையாடிய அவர், பல ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்தார்.
2023ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதலால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.
மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாக அம்மாநிலத்தில் தற்போது அமைதி திரும்பியுள்ளது. இந்நிலையில், கலவரச் சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாகப் பிரதமர் மோடி மணிப்பூர் பயணித்தார்.
தலைநகர் இம்பால் சென்றடைந்த அவரை மணிப்பூர் மாநில சிறுமிகள் பூங்கொத்து கொடுத்தும், மோடியின் ஓவியத்தை நினைவு பரிசாக வழங்கியும் வரவேற்றனர். அப்போது சிறுவன் ஒருவன் மணிப்பூரின் பாரம்பரிய தொப்பியைப் பிரதமருக்கு அணிவித்தார். அதனை அவர் நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.பின்னர், மணிப்பூர் மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய சிறுமி, மணிப்பூர் மாநிலத்திற்கு உதவிக்கரம் நீட்டிய மத்திய அரசுக்குக் கண்ணீர் மல்க நன்றித் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் சுராசந்த்பூருக்குப் பிரதமர் மோடி சென்றார். அப்போது பல கிலோமீட்டர்த் தூரத்திற்கு சாலையின் ஓரத்தில் தேசியக்கொடியுடன் நின்று மணிப்பூர் மாணவர்களும், மக்களும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைச் சென்றடைந்த அவர், மணிப்பூரின் வளர்ச்சிக்காக
சுமார் 7,300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தைரியம் மற்றும் துணிச்சலுக்குப் பெயர் பெற்ற மாநிலம் மணிப்பூர் எனப் புகழாரம் சூட்டினார். மணிப்பூர் மக்களின் உத்வேகத்துக்குத் தலைவணங்குவதாக தெரிவித்த அவர், மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மணிப்பூர்ப் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் எனக் கூறினார்.
மேலும், வளர்ச்சிக்கு அமைதி மிகவும் அவசியமானது எனவும், பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள மக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பிரதமர்த் தெரிவித்தார். அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், மணிப்பூர் மக்களுக்குப் பக்கபலமாக தானும், மத்திய அரசும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மணிப்பூர் பயணத்திற்கு முன்னதாக, மிசோரம் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். குறிப்பாக, 51 கிலோ மீட்டர் நீளமுள்ள பைராயி- சாய்ராங் ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.