பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 2014-ல் 11வது இடத்திற்குச் சென்றிருந்த நாட்டின் பொருளாதாரத்தை 4-வது இடத்திற்குக் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி எனப் புகழராம் சூட்டியுள்ளார்.
2014ஆம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு கிராமப்புறங்களில் மின்சார வசதி, வீடுதோறும் கழிப்பறைகள், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதியை ஏற்படுத்தப்பட்டது என்றும், 2014ஆம் ஆண்டில் பத்தரைக் கோடி வீடுகளில் இருந்து சமையல் எரிவாயு இணைப்பு தற்போது 40 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
2014ஆம் ஆண்டு உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு என்பது ஒரு தொலைதூரக் கனவாக இருந்தது எனக்கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, 41 கோடிக்கும் அதிகமானவர்கள் ஆயுஷ்மான் திட்டத்தில் இணைந்து பயனடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, பயனாளிகளுக்கு நேரடிப்பண பரிமாற்றத்தை விரைவாகவும், ஊழலற்றதாகவும் ஆக்கியது எனவும் கூறியுள்ளார்.
2014ஆம் ஆண்டு வரை வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீர்ப் பற்றி எரிந்து கொண்டிருந்தாகவும், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் வருகைக்குப் பிறகு சூழ்நிலை மாறியதாகத் தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி,
வடகிழக்கு பகுதியில் வன்முறையைச் சமாளிக்கும் பொறுப்பைத் தனக்கு வழங்கியதைச் சுட்டிக்காட்டினார். வடகிழக்கு பகுதியில் 60 ஆண்டுகளாக நீடித்து வந்த நாகா கிளர்ச்சியைத் தீர்க்க பிரதமர் மோடி தமக்கு உத்தரவிட்டதாகவும், ஒரு வருடத்திற்குள் நாகா கிளர்ச்சியாளர்கள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டு அமைதி பாதைக்குத் திரும்பினர் எனவும் கூறினார்.
மேலும், பிரதமர் மோடியுடன் பணியாற்றியதில் தனக்குத் தனிப்பட்ட அனுபவம் உள்ளது எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, ஜம்மு-காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து அங்கு அமைதி நிலவிட பிரதமர் மோடி வழிவகைச் செய்தார் எனவும் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமையில் ஒரு புதிய பாரதத்திற்கு ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த சான்று எனக்கூறியுள்ள அவர், உலகில் உள்ள அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மோடியைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து வருவதாகவும்,
ஒரே உலகம், ஒரே குடும்பம் என்ற உலகளாவிய சகோதரத்துவத்தை நம்பும் பிரதமர் மோடி ஒரு ரிஷி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரத்தின் மீது பிரதமர் மோடி மிகுந்த அன்பு வைத்துள்ளதாகக் கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாடுகளில் திருவள்ளுவர், பாரதியாருக்குத் தமிழ் இருக்கைகளைப் பிரதமர் மோடி அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், காசி-தமிழ் சங்கமம், ராஜேந்திரச் சோழரின் 1000வது பிறந்தநாளைப் பிரமாண்டமாகக் கொண்டாடியது பிரதமர் மோடியின் தமிழ் வளர்ச்சிக்குச் சிறந்து சான்றுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.