பசிபிக் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் முயற்சியில் சீனா தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இதன் எதிரொலியாக, இந்தியா, அமெரிக்கா,ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும், அப்பகுதியில் தங்கள் இராணுவப் பலத்தை அதிகரித்து வருகின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியப் பெருங்கடலும் பசிபிக் பெருங்கடலும் இணைக்கப்பட்ட பகுதியே இந்திய- பசிபிக். இந்த வார்த்தைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தான் அதிகம் பேசப்படுகிறது.
ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு கண்டங்களை உள்ளடக்கிய இந்தப் பெருங்கடல்கள் வழியாகவே உலகின் பெரும்பாலான வர்த்தகம் நடைபெறுகிறது.
உலகின் பாதி மக்களுக்கும், உலகின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கும், உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஏழுக்கும் தாயகமாக இந்தப் பகுதி உள்ளது
உற்பத்தி, தொழில்நுட்பம், நிதி, எரிசக்தி, விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட உலகளாவிய தொழில்களுக்கு இந்தப் பகுதி மிக முக்கியமானதாக விளங்குகிறது.
இதுமட்டுமில்லாமல், கடல்சார் ஹைட்ரோகார்பன்கள், கடற்பரப்பு கனிமங்கள் மற்றும் அரிய பூமி உலோகங்கள் உள்ளிட்ட கடல் வளங்களின் பரந்த இருப்புக்கள் இப்பகுதியில் உள்ளன. ஆகவே, அந்நிய நேரடி முதலீட்டுக்கான சிறந்த ஆதாரமாகவும் இந்தப் பகுதி விளங்குகிறது.
குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் இப்பகுதியில் அமைந்துள்ளன.
“இரண்டு கடல்களின் சங்கமம்” என்ற தலைப்பில் முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே 2007-ல் இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தான் முதன்முறையாக, இந்தோ-பசிபிக் பகுதியின் நவீன விளக்கம் வெளிப்பட்டது. அதன் பிறகு, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளும் குவாத் என்ற அமைப்பை ஏற்படுத்தின.
2008-ல் இந்தியப் பெருங்கடலில் முதன்முதலில் கப்பல்களைத் தீவிரமாக நிலைநிறுத்தியதிலிருந்து, சீனா தன் ஆதிக்கத்தைக் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது.
2019-ல் சுதந்திரமான மற்றும் திறந்த இந்திய-பசிபிக்” என்ற கொள்கை ஆவணத்தை வெளியிட்டது இந்தியா. ஆசிய – பசிபிக் மண்டலத்தின் 14 ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடல்சார்ப் பாதுகாப்பை மேம்படுத்துவது முதல் கடல் வளங்களைப் பாதுகாத்தல் வரை ஒரு புதிய செயல்திட்டத்தை அறிவித்தார்.
தொடர்ந்து, 2022-ல் இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பை அமெரிக்கா வெளியிட்டது. இந்தச் சூழலில், இப்பகுதி பெருமளவில் இராணுவ மயமாகி வருகிறது. சமீப காலமாக இந்தப் பகுதியில், ஏவுகணைப் பரிசோதனை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
சீனா தனது முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ICBM DF-41 ஏவுகணைச் சோதனையை நடத்தியது. 15,000 கிலோ மீட்டர் வரம்பு கொண்ட இந்த ஏவுகணை, அமெரிக்காவின் நிலப்பரப்பை அடைய கூடிய திறன் கொண்டதாகும்.
வட கொரியாவும் இப்பகுதியில் அமெரிக்காவைத் தாக்கக் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையை வெற்றிகரமாகச் செய்துள்ளது.
கடந்த ஆண்டு, இந்தப்பகுதிக்கான மொத்த பாதுகாப்பு செலவில் சீனாவின் பங்கு 45 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. முன்னதாக, 2023-ல் பசிபிக் பகுதி இராணுவ பயிற்சிகளுக்கு மட்டும் சீனா 15.3 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்த 55.9 பில்லியன் டாலர்களை ஜப்பான் அரசு ஒதுக்கியது. இது முந்தைய ஆண்டை விட 16.5 சதவீதம் அதிகமாகும்.
ஆசிய-பசிபிக் பகுதிக்கான தென் கொரியாவின் ராணுவச் செலவு ஆண்டுதோறும் 2 சதவீதம் அதிகரித்து, இன்னும் 5 ஆண்டுகளில், 50.1 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு செலவுகளுக்காக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கும் அதிகமாகச் செலவழிக்கும் தைவான் அதை அடுத்த 5 ஆண்டுகளில் 5 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
2021-ல் ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா மூன்று நாடுகளும் AUKUS ஒப்பந்தம் ஏற்படுத்தின. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீனாவின் இந்திய -பசிபிக் பெருங்கடல் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க, 8 பில்லியன் டாலர் முதலீட்டில் கப்பல் கட்டுமான தளத்தை ஆஸ்திரேலியா அமைத்து வருகிறது.
பசிபிக் பாதுகாப்புக்காக 10.7 பில்லியன் டாலர்களும், குவாத் பாதுகாப்பு அமைப்புக்கு 200 மில்லியன் டாலர்களும், அமெரிக்க இந்திய -பசிபிக் கட்டளை உள்கட்டமைப்புக்கு ஒரு பில்லியன் டாலர்களும் வழங்க திட்டமிட்டுள்ள அமெரிக்கா, மொத்தமாக 150 பில்லியன் டாலர்த் தொகுப்பை இந்தப்பகுதி இராணுவச் செலவுக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளது.
தற்சார்பு மற்றும் தன்னம்பிக்கைப் பாரதம் என்ற குறிக்கோளுடன் செயல்படும் இந்தியாவின் கப்பல் கட்டும் தளங்களில் தற்போது 64 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டுமானத்தில் உள்ளன.