தமிழக அரசுப் பள்ளிகளை, அவலங்களின் உறைவிடமாக மாற்றியது தான் திமுகவின் நான்காண்டுகால சாதனை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திருவண்ணாமலை மாவட்டம் செல்வரைப்பூண்டி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் 46 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதாகக் கூறி அப்பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம், திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டினை தோலுரித்துக் காட்டுகிறது.
ஒரு காலத்தில் பெருமையின் அடையாளமாகத் திகழ்ந்த தமிழக அரசுப் பள்ளிகளை, ஆட்சிக்கு வந்தவுடன் அவலங்களின் உறைவிடமாக மாற்றியது தான் திமுகவின் நான்காண்டுகால சாதனை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல குடிகளைக் கெடுக்கும் டாஸ்மாக் கடைகளை நவீனமயமாக்குவதில் முழு வேகத்துடனும் விவேகத்துடனும் செயலாற்றும் முதல்வர் ஸ்டாலின், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளைத் தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்? ஏழைப்பிள்ளைகள் படித்தென்ன லாபம் என்ற இளக்காரமா? சமூகநீதியின் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் திமுக தலைவர்கள் எல்லாம் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை எவ்வித அடிப்படை வசதியுமற்ற அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பார்களா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஊரார் வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலம் எக்கேடு கேட்டுப் போனால் என்ன என்று அலட்சியப்படுத்தும் திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.