கன்னியாகுமரியில் அரசு ஊழியரிடம் நகை, பணத்தைப் பறிக்கொடுத்த பெண், குழந்தைகளைத் தவிக்க விட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான அஜித்குமார் என்பவர்க் கொரோனா காலத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ரமணி 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
கணவர் உயிரிழந்தபோது நகைக்கடையில் 2 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி இருந்த நிலையில், ரமணி விதவை பென்ஷன் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அங்கு, ஆர்ஐ அலுவலராகப் பணியாற்றி வந்த வேல்முருகன் என்பவர் ரமணியின் செல்போனைத் தொடர்பு கொண்டு தானும் விவாகரத்து பெற்று தனிமையில் இருப்பதாகவும், ரமணியைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பி வேல்முருகனிடம் நகை, பணத்தை ரமணி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த மாதம் வேல்முருகன் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்துள்ளார்.
இதனால், ஏமாற்றமடைந்த ரமணி, பணம் மற்றும் நகையைத் திருப்பி கேட்டபோது வேல்முருகனின் மனைவி மற்றும் மாமியார் ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இதனால், மனமுடைந்த ரமணி தனது தந்தைக்கு 6 பக்கக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலைச் செய்து கொண்டார்.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் அரசு ஊழியர் வேல்முருகனைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.