சென்னையில் மந்தகதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தி சேகரித்த தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்திக் குழுவை திமுக கவுன்சிலரின் மகன் மிரட்டி தாக்க முற்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆட்சி அமைந்து நான்கரை ஆண்டுகள் கடந்தும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து நடவடிக்கை எடுக்காத திமுக அரசு, அது குறித்து செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களைத் தாக்க முற்பட்டிருப்பதற்குக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
சென்னைச் சூளைமேடு பகுதியில் சரிவர மூடப்படாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சூளைமேடு மட்டுமல்லாது சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாகவும், தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் புகார்கள் குவியத் தொடங்கின.
சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தை வெளிக்கொண்டு வரும் வகையிலும், அதற்கு உரிய தீர்வு காணும் வகையிலும் தமிழ்ஜனம் தொலைக்காட்சி சென்னை மாநகர் முழுவதும் தனது கள ஆய்வைத் தொடங்கியது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சூளைமேடு மட்டுமல்லாது கோடம்பாக்கம், வடபழனி, மயிலாப்பூர், தி.நகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் என எங்கெங்கெல்லாம் மழைநீர் வடிகால் பணிகள் மந்தமாக நடைபெறுகிறதோ? அவற்றை எல்லாம் செய்தி சேகரித்து அரசு நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கள ஆய்வின் போது பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதும், பணிகள் நடைபெறுவதற்கான எச்சரிக்கை பலகைகள் கூட இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.
மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், மழைநீர் வடிகால் பணிகளுக்காகத் தோண்டப்பட்டு மூடப்படாத நிலையில் இருக்கும் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதும் கள ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக மந்தமாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாகச் சென்னை அசோக்நகர் 131வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செய்தியாளர் பாவேந்தர் வழக்கம் போல செய்தி சேகரிக்கச் சென்றார்.
பல மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கப்பட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதோடு, காலை 11 மணி வரை எந்தவிதப் பணிகளும் நடைபெறாதது குறித்து செய்தி சேகரித்த போது அங்கு வந்த திமுக நிர்வாகிகள் சிலர் தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செய்தியாளரை தாக்க முயன்று ஒளிப்பதிவை நிறுத்த சொல்லி மிரட்டினர்.
தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை மிரட்டியது அசோக் நகர் பகுதியின் 131வது வார்டு உறுப்பினர் கோமதி மணிவண்ணனின் மகன் செந்தில் என்பதும் தெரியவந்துள்ளது. திமுக ஆட்சியமைந்த நான்கு ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை ஒதுக்கியதாகக் கூறும் சென்னை மாநகராட்சி அதற்கான எந்தப் பணிகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போதும் சென்னை மாநகர மக்கள் தத்தளித்துக் கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது, 95 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டது எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துவரும் நிலையில் தமிழ் ஜனம் நடத்திய கள ஆய்வில் 50 சதவிகிதம் பணிகள் கூட நிறைவடையவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
அது தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை மிரட்டி தாக்க முயன்ற திமுக நிர்வாகிகளின் அடாவடித் தனத்திற்குத் தமிழகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.