ஒரே தீவை இரு நாடுகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி மாற்றிப்பயன்படுத்தும் விநோதம் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா.. அப்படியொரு விநோதத் தீவு எங்கிருக்கிறது… எந்தெந்த நாடுகள் அப்படி அதிசய ஒப்பந்தத்தைப் போட்டிருக்கின்றன என்பதைப் பற்றி பார்க்கலாம்…
அமைதியாகப் பாயும் இந்தப் பிடோசோவா நதிதான் ஸ்பெயின், பிரான்ஸைப் பிரிக்கும் எல்லைக்கோடு. 360 ஆண்டுகள் பழமையான ரகசியத்தைத் தாங்கிக் கொண்டு அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் தனித்து நிற்கிறது இந்த ஃபெசன்ட் தீவு. 6 மாதங்களுக்கு ஒருமுறை ஸ்பெயினும், அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிரான்சும் ஃபெசன்ட் தீவை மாற்றி மாற்றி 350 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகம் செய்து வருவது பலரையும் வியக்க வைக்கிறது.
டர்க்கைஸ் நீர் இல்லை, ஆடம்பர வில்லாக்கள் இல்லை, உங்கள் முழங்கைகளை மடக்கி ஓய்வெடுக்க ஒரு கஃபே கூட இல்லை.. ஆனாலும் ஃபெசன்ட் தீவு என்று அழைக்கப்படும் இந்தச் சிறிய தீவு, அரசத் திருமணங்கள், அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் உலகின் விசித்திரமான எல்லை வரையறைகளின் ஒன்றாக ஒளி வீசி வருகிறது.
பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து, முற்றுப்புள்ளியாக நிற்பதுதான் ஃபெசன்ட் தீவின் அடையாளம்..
பிரான்சும், ஸ்பெயினும் இந்தத் தீவை முற்றிலுமாக விட்டுக்கொடுக்க விரும்பாத நிலையில், எளிமையான, அதே நேரத்தில் அசாதாரணமான ஒரு சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டன.
1659ம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட (Pyrenees) பைரனீஸ் ஒப்பந்தத்தின்படி ஃபெசன்ட் தீவை இருநாடுகளும் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் மாறி மாறி நிர்வகித்து வருகிறது. இதே நிலை இன்னமும், எவ்விதச் சலசலப்பும் இல்லாமல் வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது…
இந்தத் தீவுக்குச் செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதியில்லையாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறைத் தீவை ஒப்படைக்கும் சடங்கு நிகழ்வு மற்றும் பராமரிப்புக்காக மட்டும், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸை நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தத் தீவில் கால் பதிப்பார்களாம்..
பிரான்ஸின் 14ம் லூயிஸ் மற்றும் ஸ்பெயினின் மரியா தெரசா ஆகியோரின் திருமணம் இந்தத் தீவில்தான் நடத்தப்பட்டது. பின்னாளில் இது அமைதியை நிலைநாட்டுவதற்கான இடமாக, அடையாளமாக மாறியது. மணல் நிறைந்த கடற்கரைகள், பாஸ்க் கட்டடக்கலைக் கொண்ட பிரான்ஸின் ஹெண்டே முதல், வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய நகரமான, திக்குமுக்காட செய்யும் சந்தையைக் கொண்ட இருன் நகரம் வரை ஃபெசன்ட் தீவுப் பகுதி கைக் கோர்த்து நிற்கிறது.
ஒரு காலத்தில் ஐரோப்பிய ராஜதந்திரத்தின் சுமையைச் சுமந்த அமைதியான தீவு, பல ஆண்டுகால வரலாற்றைச் சுமந்து கொண்டு இன்று அல்ல என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.