செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் ஜனம் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனச் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாகப் பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட செய்தி குறிப்பில்,
சென்னைச் சூளைமேட்டில் மழைநீர் வடிகால் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை திமுகப் பிரமுகர் செந்தில் மிரட்டிய சம்பவம் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பிரமுகர் செந்தில், ஒளிப்பதிவு கருவியை பறிக்க முயன்றதுடன், பத்திரிகையாளர்களிடம் மிகவும் ஆபாசமாகவும் பேசியது கடும் கண்டனத்திற்குரியது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்து, அவர்களைத் தாக்க முற்பட்ட செந்தில் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய பத்திரிகையாளர் மன்றம், திமுக தரப்பில் அவர் மீது உடனடியாகக் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.