பொதுமக்கள் உயிரிழப்பதை தவிர்க்கவே ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் முதல் தாக்குதல் அதிகாலை ஒரு மணியளவில் நடத்தப்பட்டதாக முப்படை தளபதி அனில் சவுகான் விளக்கம் அளித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சேதத்தை எதிர்கொண்டது.
இந்த நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான முக்கிய தகவலை முப்படை தளபதி அனில் சவுகான் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக ஜார்க்கண்ட்டில் பேசிய அவர், பொதுவாக மற்றொரு நாடு மீது தாக்குதல் நடத்துவதற்குச் சரியான நேரம் காலை ஐந்தரை மணி முதல் 6 மணிதான் எனத் தெரிவித்தார்.
ஆனால், அந்நேரத்தில் தாக்குதல் நடத்தினால், பொதுமக்கள் அதிகம் உயிரிழக்க நேரிடும் எனக்கருதியே அதிகாலை ஒரு மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய வீரர்கள் துல்லியமாகத் தாக்குதல் நடத்தி சேதம் குறித்து கண்டறிவார்கள் என்ற நம்பிக்கையின் பேரிலேயே ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை அதிகாலை ஒரு மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார்.
ஆயுதத்தை அணுகும் முறையில் பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்படுவதாகப் பாராட்டிய அனில் சவுகான், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்துறையில் மேம்படுத்திக் கொள்வது அவசியம் என அறிவுரை வழங்கினார்.