பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கவில்லை எனப் பாகிஸ்தான் தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. ஆனால், அடுத்தடுத்து பயங்கரவாதிகள் வெளியிட்டு வரும் வீடியோக்கள், பாகிஸ்தானின் கூற்றை எல்லாம் பொய்யாக்கி வருகின்றன. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
பாகிஸ்தான் தனது நாட்டு மக்களைக் காட்டிலும் பயங்கரவாதிகளின் நலனுக்காக அனைத்தையும் செய்து வருகிறது. பணம், ஆயுதம், பயிற்சி என அனைத்தையும் பயங்கரவாதிகளுக்குத் தங்குதடையின்றி வழங்கி வருகிறது. இது ஊரறிந்த ரகசியம்.
ஆனால், பயங்கரவாதிகளுக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என ஆண்டாண்டு காலமாகப் பாகிஸ்தான் சத்தியம் செய்து வருகிறது. மேலும், இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைத் தோல்வியில் முடிந்ததாகவும், அந்தத் தாக்குதலால் தங்களுக்குப் பெரியளவில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.
பாகிஸ்தானின் இத்தகைய வாதங்கள் அனைத்தும் பொய் என்பதை, தக்க ஆதாரங்களுடன் மத்திய அரசு தெளிவுப்படுத்திவிட்டது. இந்நிலையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளும், பாகிஸ்தானின் உண்மை முகத்தைத் தற்போது அம்பலப்படுத்த தொடங்கியுள்ளன.
அண்மையில், பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில்,ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் கமாண்டரான மசூத் இலியாஸ் காஷ்மீரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தானின் எல்லைகளைப் பாதுகாக்கத் தாங்கள் பயங்கரவாதத்தைத் தழுவியதாகவும், டெல்லி, காபூல், கந்தஹார் உள்ளிட்ட பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறினார். ஆனால், மே 7ம் தேதி பஹவல்பூரில் இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசாரின் குடும்பமே பூண்டோடு அழிக்கப்பட்டதாக வேதனையுடன் அவர் தெரிவித்தார்.
இதுமட்டுமல்லாமல், கொல்லப்பட்ட மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்களின் இறுதிசடங்கை அரசு மரியாதையுடன் நடத்த பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் உத்தரவிட்டதாகவும், இறுதி சடங்கில் ராணுவத் தளபதிகளைக் கலந்து கொள்ள அறிவுறுத்தியதாகவும் மசூத் இலியாஸ் காஷ்மீரி குறிப்பிட்டார்.
இவரின் இந்தப் பேச்சு 2 விஷயங்களைத் தெளிப்படுத்தியுள்ளது. ஒன்று, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் மசூத் அசாரின் குடும்பம் அழிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி மிக நெருங்கிய உறவு வைத்துள்ளார்.
மறுபுறம், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் மூத்த தலைவரான சைஃபுல்லா கசூரியும் தன்பங்கிற்கு, பாகிஸ்தானின் உண்மை முகத்தை தோலுரித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் முரிட்கே பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டன.
இவற்றைத் தனது சொந்தச் செலவில் மீண்டும் கட்டி தர பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளதாக, சைஃபுல்லா கசூரி அண்மையில் தெரிவித்தார். இந்த முகாம்களை அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்க் கூறினார்.
இவரின் இந்தப் பேச்சு, பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் நிதியுதவி அளிப்பதை உறுதி செய்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளுக்கான கிரே பட்டியலில் பாகிஸ்தான் ஏற்கனவே இடம்பெற்றிருந்தது. தற்போது மீண்டும் அந்தப் பட்டியலில் பாகிஸ்தான் இணைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உலக அரங்குகளில் பாகிஸ்தானை அம்பலப்படுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு, பயங்கரவாதிகளின் இத்தகைய பேச்சுகள் கூடுதல் வலு சேர்த்துள்ளன.